×

கருணையால் நம்மை ஆளும் நிர்குண அம்பிகை

இந்த வாரம் 152வது நாமமான நிஷ்காரணா முதல் 183வது நாமமான நிஷ்பரிக்ரஹா வரை பார்ப்போமா!
அதிலும், அம்பிகையினுடைய நிர்குணத்தைத்தான் நாம் பார்த்துக் கொண்டே வருகிறோம்.
முதலில் நிஷ்காரணா என்பதை எடுத்துக் கொள்வோம். அம்பிகைக்கு காரணமற்றவள் என்று பொருள். எந்த வஸ்துவிற்கு காரணம் இல்லையோ… அந்த வஸ்துவிற்கு நிஷ்காரணா என்று பெயர். ஏனெனில், நாம் எதைப் பார்த்தாலும் காரணம், காரியம் என்று பழக்கமாகி விட்டது. அது சித் வஸ்துவாக இருக்கட்டும். ஜட வஸ்துவாக இருக்கட்டும். ஏதாவது, ஒரு காரணம் வைத்திருப்போம். உதாரணமாக இந்தச் சரீரத்திற்கு தாய்-தந்தை என்று சொல்வோம்.
நம் வாழ்க்கையை கர்மாதான் நிர்ணயிக்கின்றது என்று சொல்கிறோம். நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ, எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கொள்கிறோம். காரண, காரியத் தொடர்பு இருந்து கொண்டே வருகிறது. ஆனால், அம்பாளோ காரண – காரியத் தொடர்புக்கு அப்பாற்பட்டவள் என்பதால் நிஷ்காரணா என்று அழைக்கிறோம்.
அப்படி, நிஷ்காரணாவாக இருக்கக் கூடிய அம்பாள், அடுத்து நிஷ்கலங்கா என்று வர்ணிக்கப்படுகின்றாள். எந்தக் களங்கமும் அற்றவள். எப்படியெனில், போன நாமத்தில் சொல்லப்பட்ட காரணமே இல்லாதவளாக இருப்பதால் எந்த களங்கமும் இல்லாதவளாகவும் இருக்கிறாள்.
ஒரு மரத்தில் குறைபாடு இருந்தால் அதிலிருந்து செய்யப்படும் பொருட்களிலும் குறைபாடு ஏற்படும். அதேபோல, கோழியின் முட்டை சரியில்லை எனில் அது கோழியின் குறைபாடாகத்தான் இருக்கும். காரணத்திலிருந்து காரியத்திற்கு வரும்போது, அதில் காரணத்தின் குறைபாட்டை காரியத்திலும் காணலாம். இதுவே இங்கு கலங்கம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், அம்பாளுக்கு எந்த காரணமும் காரியமும் இல்லாமல் இருப்பதால் அவள் களங்கமற்று இருக்கிறாள். அதனால், அவள் நிஷ்களங்கா என்று அழைக்கப்படுகிறாள்.
அடுத்ததாக, நிருபாதிர் – உபாதி அற்றவள் என்று பொருள். ஒரு புத்தகத்தை நான்கைந்து பக்கங்கள் விட்டுப் போய்விட்டது. இது களங்கமாகும். இதன் தொடர்ச்சியாக நம்மால் அந்த நான்கைந்து பக்கங்களில் என்ன உள்ளது என்றும், அதன் தொடர்ச்சியையும் அறிய முடியாமல் போய் விடுகின்றது. இதற்காக நாம் இன்னொரு புத்தகத்தை தேடிக்கொள்ள வேண்டியதாகிறது. இதனால் உபாதி (consequence) வருகின்றது. காரணமும் இல்லை. காரியமும் இல்லை. களங்கமும் இல்லை. உபாதி என்பதும் இல்லை. குறைபாடும் கிடையாது. உபாதி என்பது இல்லையாதலால் நிருபாதி என்று அழைக்கப்படுகிறாள்.
இதற்குப் பிறகு நிரீஸ்வரா என்கிற நாமம் வருகிறது. இது முக்கியமான ஒரு நாமம் ஆகும். நிரீஸ்வரா என்றால் ஈஸ்வரன் அற்றவள் என்று வெளிப்படையாக ஒரு அர்த்தம் வரும். இதென்ன நாத்திகத்தை சொல்லக் கூடிய நாமமா என்றும் தோன்றும். ஆனால், அதெல்லாம் இல்லை. இங்கு நிரீஸ்வரா என்றால் ஈஸ்வரா என்றால் தலைவன் என்று பொருள். இங்கு அம்பாளுக்கு மேலான இன்னொரு தலைவன் இல்லை. அதனால் அவளுக்கு மேலான இன்னொன்று இல்லை. தானே தனக்கு தலைவியாக இருக்கும் உயர்ந்த நிலையாகும்.
ஏன், காமேஸ்வரர் கூட ஸ்வாதீன வல்லபா என்று அவரே அம்பாளுக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கிறார். ஆனால், அம்பாள் விஷயத்தில் அவளுக்கு மீறி இன்னொரு தலைவனோ தலைவியோ இல்லை.
இப்போது பார்த்தது சாதாரண ஒரு விளக்கம்.
வேதாந்தபரமாக இன்னொரு விளக்கம் இதற்கு இருக்கிறது. உபாதி இல்லை. களங்கம் இல்லை. காரணம் இல்லை. இதற்கு முன்னாலுள்ள எல்லா நாமங்களின் பொருளையும் எடுத்துப் பார்க்கலாம். அதாவது இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டி பண்ணுகிறவளாக இருக்கிறாள். அவள் சிக்கிக் கொள்பவளாக இதில் இல்லை. நமக்காக அவள் சகுண ரூபத்தில் வருகிறாள். நாம ரூபங்களெல்லாம் எடுத்துக் கொண்டு வருகிறாள். ஆனால், இதில் அவள் சிக்கிக் கொள்வது கிடையாது.
இன்னொரு விளக்கமாக வேதாந்தத்தில், பிரம்மம், ஈஸ்வரன், ஜீவன், உபாதியோடு கூடிய பிரம்மமே ஜீவன். பிரம்மத்திற்கு உபாதி கிடையாது. ஆனால், பிரம்மம் உபாதியோடு கூடினால் அது ஜீவன். உபாதியற்ற பிரம்மம் ஜீவன். அதாவது சரீர அபிமானமாகவோ, நாம ரூபமாகவோ சேர்த்துக் கொண்டு இயங்குவதே ஜீவன். இவை எதுவும் இல்லாத நிலையே பிரம்மம். புரிகின்றதா. இப்போது நடுவிலிருக்கும் ஈஸ்வரன் என்பது என்ன?
இந்த உபாதியோடு இருக்கின்ற ஜீவனை, உபாதியற்ற பிரம்ம நிலைக்கு கொண்டு போவதற்காக அதே பிரம்மம் தன்னை ஈஸ்வரனாக வெளிப்படுத்திக் கொள்கிறது. இப்போது பாருங்கள். அம்பாளுக்கு உபாதியே இல்லை என்று நாமாவில் சொல்லி விட்டோம். அப்படி உபாதியே இல்லை என்று சொல்லிவிட்டால் ஈஸ்வரனுக்கு என்ன வேலை. அதனால் அம்பிகையை நிரீஸ்வரா என்று வர்ணிக்கின்றனர். இதில் ஈஸ்வரன் என்கிற நிலையே இல்லை. ஏனெனில், அவள் சாட்சாத் பிரம்மமாகவே இருக்கிறாள்.
இந்த நாமம் வரையிலும் நாம் அம்பிகையின் நிர்குணங்களை வெவ்வேறு விதங்களாக பார்த்திருக்கிறோம்.
இப்போது இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம். இப்படியொரு நிர்குண நிலையை ஒரு சாதகன் சிந்திப்பதால், தெரிந்து கொள்வதால், உபாசிப்பதால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி வரும்.
ஏனெனில், சகுண – உருவ வழிபாடு, நாம ஜபம், பூஜை போன்றவற்றிற்கு நிறைய பிரயோஜனம் சொல்லி விட்டோம். ஆனால், இந்த நிர்குண உபாசனைக்கு, நிர்குண தியானத்திற்கு என்ன பிரயோஜனம். அந்த நிர்குண வஸ்துவிடம் எதுவுமே இல்லை… எதுவுமே இல்லை… என்று சொல்வதால், அந்த நிர்குண வஸ்துவை சிந்திக்க சிந்திக்க… இவனுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும். எதெல்லாம் தன்னுடைய சொரூபத்தை அடைவதற்கு தடையாக எதெல்லாம் இருக்கிறதோ ஒவ்வொன்றாக விலகி விலகிப் போகும். இந்த நிர்குண தியானத்தினால். இப்படி இவனிடம் இருக்கும் களங்கங்கள் போவதற்கு இந்த நிர்குண தியானம் அவசியம்.
இதைத்தான் அடுத்து வரக்கூடிய இருபத்தெட்டு நாமங்களிலும் பார்க்கப் போகிறோம்.
நீராகா – ராக மதநீ – அவளிடம் ஆசை கிடையாது. அதனால் அவளை தியானம் பண்ணுவதால் இந்த சாதகனிடம் இருக்கும் ஆசை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகிறது.
நிர்மதா மதநாசிநீ – அவளிடம் அகந்தை கிடையாது. அவளை தியானம் பண்ணுவதால் இவனிடம் இருக்கும் அகந்தையும் அழிந்து போகின்றது.
நிச்சிந்தா – அவளிடம் சிந்தனையே இல்லாத, கவலையோ துன்பமோ இல்லாத நிச்சிந்தனை உள்ள நிலையிலிருக்கிறாள். அவளை தியானம் பண்ணுவதால் நமக்கும் நிச்சந்தனையான நிலை கைகூடுகிறது.
நிரஹங்காரா – அவளிடம் அஹங்காரம் கிடையாது. அவளை தியானிப்பதால் நமக்குள் இந்த அஹங்காரம் இல்லாமல் போய் விடுகிறது.
நிர்மோஹா – மோஹநாசிநீ – அவளுக்கு மோஹம் கிடையாது. அவளை தியானம் செய்வதால் நமக்குள் இருக்கும் மோஹம் அழிந்து போகின்றது.
நிர்மமமா – மமதாஹந்த்ரீ – என்னுடையது என்று சொல்லக் கூடியதான, அந்த மமாகாரம் அவளிடம் கிடையாது.
அவளை தியானம் பண்ணுவதால் என்னுடையது என்று சொல்லக்கூடிய அந்த மமாகாரம் என்னிடம் அழிந்து போய் விடுகிறது.
நிஷ்பாபா – பாபநாசிநீ – அவளிடம் பாபமே கிடையாது. அவளை தியானம் செய்வதால் நம்மிடம் இருக்கக் கூடிய பாபங்களெல்லாம் அழிந்துபோய் விடுகின்றன.
நிஷ்க்ரோதா – க்ரோத சமநீ – அவளிடம் கோபம் கிடையாது. அவளை தியானம் பண்ணுவதால் நம்மிடம் இருக்கும் கோபம் அழிந்து போகின்றது.
நிர்லோபா – லோபநாசிநீ – அவளிடம் கஞ்சத்தனம் கிடையாது. அவளை தியானம் செய்வதால், நம்மிடம் இருக்கும் கஞ்சத்தனம் அழிந்துபோய் விடுகின்றது.
நிஸ்ஸம்சயா – ஸம்சயக்நீ – அவளிடம் சந்தேகம் கிடையாது. அவளை தியானம் பண்ணுவதால் நம்மிடம் இருக்கின்ற சந்தேகம் அழிந்துபோய் விடுகிறது.
நிர்ப்பவா – பவநாசிநீ – அவளுக்கு கர்மா கிடையாது. அவளை தியானம் பண்ணுவதால் நமக்கும் கர்மா இல்லாமல் போய் விடுகிறது.
நிர்விகல்பா – அவளுக்கு மாற்றம் கிடையாது. அவளை தியானம் பண்ணுவதால் நமக்கும் மாற்றம் இல்லாத நிலை கூடுகிறது.
நிராபாதா – அவளுக்கு துன்பம் கிடையாது. அவளை தியானம் பண்ணுவதால் நமக்கும் துன்பமில்லாமல் போய்விடுகின்றது.
நிர்ப்பேதா – பேதநாசிநீ – அவளுக்கு பேதம் கிடையாது. அவளை தியானம் பண்ணுவதால் நம்மிடமுள்ள பேதபுத்தி அழிந்துபோய் விடுகிறது.
நிர்நாசா – அவளுக்கு அழிவு அல்லது நாசம் கிடையாது. அவளை தியானம் செய்வதால் நம்மையும் அழிவற்ற வஸ்துவாக நிலைபெறச் செய்கிறாள்.
ம்ருத்யுமதநீ – அவள் அழிவற்றவளாக இருப்பதால் மரணத்தையே அழித்து விடுகிறாள். நாம் எந்த மரணத்தை பார்த்து பயப்படுகிறோமோ அந்த மரணமே அங்கு அழிந்து போய்விடுகிறது.
நிஷ்க்ரியா – அவளுக்குச் செய்ய வேண்டிய க்ரியைகள், கர்மாக்கள் எதுவுமே இல்லை.
நிஷ்பரிக்ரஹா – அந்த கர்மாவினால் ஏற்படக்கூடிய பலனை ஏற்றுக்கொள்ள வேண்டிய, தன்மையும் அவளிடம் இல்லை. அவளை தியானம் பண்ணுவதால் நமக்கு கர்மா இல்லாமல், கர்மா அழிந்து போய்விடுகிறது. செய்யக்கூடிய கர்மாவின் பலனும் அழிந்துபோய் அந்தப் பலனும் நம்மிடம் வராமல் போய்விடுகிறது.
அம்பாளை நிர்குணமாக தியானம் பண்ணுவதற்கு இதுதான் காரணம். இப்படி எதெல்லாம் பிரதிபந்தங்களாக, தடையாக இருக்கிறதோ அவையெல்லாம் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகிறது. இதனாலேயே அம்பாளினுடைய நிர்குண தியானம் நமக்கு அவசியம்.
உண்மையிலேயே நிர்குணத்தில் நாம் பலனையே கேட்கக் கூடாது. ஏனெனில், நிர்குணம் என்பது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனாலும், வசின்யாதி வாக் தேவதைகள் கருணை கூர்ந்து நிர்குண தியானத்திற்கு கூட, பலன்களைச் சொல்கிறார்கள். நீ நிர்குணமாக தியானம் பண்ணினால் ஆசை, கோபம், மோஹம், அகங்காரம், கஞ்சத்தனம், கர்மா… ஏன்… மரணமே கூட அழியும் என்று இங்கு பலன்களை சொல்லியிருக்கிறார்கள்.
அதனால்தான் நாம் இந்த நாமங்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்திருக்கிறோம்.
இந்த நாமங்களில் நிர்குணத்தினுடைய மிகப் பெரிய விரிந்த நிலையை நமக்கு காண்பிக்கிறார்கள். அதனால், அம்பாளினுடைய நிர்குண உபாசனைக்கென்றே (உருவமற்ற வழிபாடு) ஒரு கோயில் இருக்கிறதென்றால், அது திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார் கோவில் ஆகும். சுவாமி ஆத்மநாத சுவாமியாகவும், அம்பாள் யோகாம்பாள் என்கிற பெயரிலும் அருள்கிறாள். சுவாமி முழு நிர்குணமாக ரூபமே இல்லாமல் இருக்கிறார். அம்பாள் காருண்யமாகி தன்னுடைய பாதங்களை மட்டும் சகுணமாக (பாதத்தையே தனது உருவமாக…) காண்பித்துக் கொடுக்கிறாள். மாணிக்கவாசகர் மூலமாக நமக்கு அருள் பண்ணும்படியாக நமக்கெல்லாம் அருள் பண்ணும் படியான கோயிலாக ஆவுடையார் கோவில் விளங்குகிறது. எனவே, மேலே பார்த்த அனைத்து நாமாக்களுக்குமே இந்த ஆலயத்தைச் சொல்லலாம்.
(சுழலும்…)

Tags : Ambika ,Nishkarana ,Nishparigraha ,Nirguna ,
× RELATED காலமெல்லாம் காப்பாற்றும் கம்பால ராமச்சந்திர தீர்த்தர்!