- நித்யமுக்தா
- நிர்விகாரா
- நிஷ்ரபாஞ்சா
- நிராச்ச்ரயா
- நித்யா சுட்டா
- நிதியபுதா
- நிர்வாத்யா
- நிரந்தரா
- நிர்குணம்
144-நித்யமுக்தா, 145-நிர்விகாரா, 146-நிஷ்ப்ரபஞ்சா, 147-நிராச்ரயா, 148-நித்ய சுத்தா, 149-நித்யபுத்தா, 150-நிரவத்யா, 151-நிரந்தரா.
லலிதா சஹஸ்ரநாமத்தில் நிர்குண உபாசனையைக் காட்டும் மேலேயுள்ள நாமங்களுங்களுக்கான முன்னுரையாக சில விஷயங்களை சென்ற இதழில் பார்த்தோம். எதனால் நிர்குணம் என்று சொல்கிறோமென்று சில விஷயங்களை முன்னுரையாக பார்த்து விட்டோம். இப்போது அடுத்தடுத்த நாமங்களின் பொருளைப் பார்ப்போம்.
இந்த ஜீவாத்மா என்ன செய்கிறது.பந்தத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு முக்தியை விரும்புகிறது. அப்போது பிரம்மம் என்ன செய்கிறதெனில் நித்ய முக்தா என்கிற தன்னுடைய நிலையை காண்பிக்கிறது. பரமாத்மாவான லலிதைக்கு முக்தி என்பது கிடையாது. ஏனெனில், பந்தமே கிடையாது. நாந்தான் உனக்கு ஆத்மாவாகவே இருக்கிறேன். உண்மையிலேயே பந்தம் கிடையாது. பந்தம் என்பதே உன்னுடைய கல்பிதம்தான். அந்த கல்பிதத்திலிருந்து முக்தியை அடைய வேண்டுமென்று நினைக்கிறாய். புதிதாக நீ விடுதலையை அடைய வேண்டியதில்லை. இப்படி இந்த நிலையை காண்பித்துக் கொடுப்பதால் அம்பிகைக்கு நித்ய முக்தா என்று பெயர்.
இப்போது இந்த முக்தியை எது தடுக்கின்றது. இன்பம் துன்பம் போன்ற பிரபஞ்சத்தில் நிகழும் மாற்றங்கள். ஆனால், அம்பிகையோ மாற்றங்கள் இல்லாதவள். மாற்றங்களுக்கு விகாரங்கள் என்று பெயர். மாற்றங்களே இல்லாத நிலையில் அம்பாள் இருப்பதால் அவளுக்கு நிர் விகாரா என்று பெயர். மாற்றங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என்று ஜீவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, இங்கு பாரப்பா… மாற்றங்கள் எதுவுமே இல்லை. நீ மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவள் என்று காண்பித்துக் கொடுக்கிறார்.
அடுத்ததாக, நிஷ் பிரபஞ்சா எனும் நாமம். பிரபஞ்சத்தினால்தான் இந்த ஜீவன் இன்பம் துன்பம் எல்லாமும் அனுபவிக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் பிரபஞ்சம்தான். இந்த பிரபஞ்சமும் உன்னுடைய கல்பிதத்தில் உண்டானதுதான். உண்மையில் இந்த பிரபஞ்சத்தினால் உனக்கு ஒரு பந்தமும் கிடையாது. பிரபஞ்சமாக நானே இருக்கிறேன். நீ இதில் சிக்கியிருப்பதாக நினைத்துக் கொள்ளாதே. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நீதான் என்கிற நிலையினை அடைந்தால், பிரபஞ்சம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். இந்த உயர்ந்த நிலையினை அம்பாள் இங்கு காண்பித்துக் கொடுப்பதால் அம்பாளுக்கு நிஷ் ப்ரபஞ்சா என்று வர்ணிக்கிறார்கள்.
இப்படி நிஷ் பிரபஞ்சாவாக இருக்கும் அம்பாள் ஜீவனுக்கு ஒன்றை காண்பித்துக் கொடுக்கிறாள். காட்டுக்குள் சிக்கியவன் காட்டிலேயே தீர்வை தேடிக் கொண்டிருக்கிறானோ, அதுபோல தீர்வை தேடக்கூடாத இடத்தில் தேடுகின்றாய். நீ கல்பிதமான பிரபஞ்சத்தை பிடித்துக் கொள்ளாதே. உண்மையான சொரூபமாகிய என்னை பிடித்துக் கொள். நீ ஆஸ்ரயிக்க அதாவது நீ கைக்கொள்ள வேண்டியது என்னையே ஆகும். அப்படி ஆஸ்ரயம் பண்ண வேண்டிய வஸ்துவே நான் தான் என்று அம்பாள் காண்பிக்கும்போது, அந்த நிலையில் அம்பாளுக்கு நிராஸ்ரயா என்று பெயர்.
அடுத்ததாக இப்படி நிராஸ்ரயா என்று அம்பாள் காண்பித்து கொடுத்ததற்கு பிறகு, எல்லாருக்கும் ஆஸ்ரயமாக அவள் இருக்கிறாள் என்கிற நிலையை அவள் காண்பித்துக் கொடுக்கிறாள். மேலும், இப்படி கல்பிதமான உலகினில் இருக்கும்போது சுத்தம் அசுத்தம் என்றெல்லாம் வருகின்றது. நம்முடைய மனதாலும், விருத்திகளாலும், எண்ணங்களாலுமே அசுத்தமாகின்றது. நாமும் நம் நிலையை மறந்து சிக்கிக் கொள்கிறோம். ஆனால், அம்பாளோ சுத்தம் – அசுத்தம், ஞானம் – அஞ்ஞானம், பிறப்பு – இறப்பு, என்றெல்லாம் எனக்கு எதுவுமே கிடையாது. அதனால் அம்பாளுக்கு நித்ய சுத்தா… என்று பெயர்.
இந்த நித்ய சுத்தா என்கிற நிலையை அம்பாள் எப்படி காண்பித்துக் கொடுக்கிறாள். உயர்ந்த ஞான நிலையாக அம்பாள் இதை காண்பித்துக் கொடுக்கிறாள். நீ சுத்தமானவன் என்று அம்பாள் காண்பிக்கும்போது ஜீவனுக்கு அந்த உயர்ந்த ஞானம் ஏற்படுகின்றது. அந்த ஞானத்திற்கு புத்த என்று பெயர். புத்த என்றால் ஞானம் என்று பொருள். அதனால் அம்பாளுக்கு நித்ய புத்தா என்று பெயர்.
இதற்கு அடுத்து அந்த ஞானம் ஒருவனுக்கு எப்போது சித்திக்கிறதோ அப்போது அவனுக்கு துன்பம் கிடையாது. அவதி என்றால் என்றால் துன்பம் என்று பொருள். நாம் கூட பேச்சு வழக்கில் ஒரே அவதியா போச்சுப்பா என்று சொல்வோம். இப்போது அவதி இல்லாத நிலை நிரவத்யா என்பதாகும். இப்போது எந்த துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமென்று நினைக்கிறோமோ அந்த துன்பமே இல்லாமல் போய் விடுகின்றது. இந்த நிலையை அனுக்கிரகம் செய்பவளுக்குத்தான் நிரவத்யா என்று பெயராகும்.
அடுத்து, எதனால் இவன் இந்த துன்பத்தை அடைந்தான். தான் அழிந்து போவோம் என்றும், தன்னை ஒரு அழிவுள்ள பொருளாகவும் நினைத்ததால்தான். சாதாரண வழக்கு மொழியில் இதனை மரண பயம் என்று சொல்வோம். இந்த அழிவை நோக்கிய பயத்தை அம்பாள் காண்பித்துக் கொண்டே நமக்குள் இருக்கும் அழிவு என்கிற பயத்தை நீக்கி விடுகிறாள். நீ அழிவற்ற பொருள் என்று காண்பிக்கிறாள். நீ நிரந்தரமானவன் என்று அம்பாள் காண்பிக்கிறாள். எனவே, அம்பாளுக்கு நிரந்தரா… என்று பெயர்.
இந்த எட்டு நாமங்களிலும் ஜீவன் ஒவ்வொரு நிலையிலும் ஜீவன் போலியாக அனுபவிக்கின்ற விஷயங்களை நேதி… நேதி… என்றும் அதாவது இல்லை… இல்லை… என்று அம்பிகையே negate செய்து தன்னுடைய சொரூபத்தை காண்பிக்கிறாள். அதுவே நீ என்றும் சொரூபத்தை, ஞானத்தையும் காட்டியும் கொடுக்கிறாள். இந்த எட்டு நாமங்களுக்கான கோயில் என்னவென்று பார்க்கலாம்.
இப்போது பார்த்த எட்டு நாமங்களுமே நிர்குணத்தைப் பற்றி சொல்கிறது. நிர்குணமாக இருக்கக் கூடிய பிரம்மம், நமக்கு சகுணமாக (உருவங்களுக்குள் அகப்பட்டு) ஒரு நாமத்தோடும் ரூபத்தோடும் வருகின்றது. பிறகு, அந்த பிரம்மமே தன் பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு சொரூப நிலைக்கு உயர்த்துகிறது.
இந்த ஒரு படிநிலையே நமக்கு ஒரு கோயிலை ஞாபகப்படுத்துகிறது. தஞ்சாவூருக்கு அருகேயுள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலே இதை ஞாபகப்படுத்துகிறது. அம்பாள் இங்கு மாரியம்மனாக இருக்கிறாள்.
இந்த கோயிலில் அம்பாளுக்கு உருவம் கிடையாது. அம்பாள் நிர்குண நிலையில்தான் அந்த தலத்திலிருக்கிறாள். ஒரு புற்று ரூபத்தில் அம்பாள் அங்கு ஆவிர்பவித்தாள். ஒரு இடைப்பட்ட காலத்தில் அம்பாளை கவனிக்காமல் வழிபடாமல் விட்டுவிட்டனர். அப்போது அங்கு சதாசிவ பிரம்மேந்திரர் வருகிறார். ஏன் வருகிறார் எனில், அப்போது இருந்த ராஜாவிற்கு ஒரு பிரச்னை வந்தது என்று வேறொரு விஷயம் சொல்லப்படுகின்றது. அந்த ராஜாவை சதாசிவ பிரம்மேந்திரர் புன்னைநல்லூருக்கு அழைத்துக் கொண்டுபோய், ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். அம்பாளின் சாந்நித்தியத்தை ராஜாவுக்கு உணர்த்தினார். அவரின் பிரச்னையை தீர்த்து வைக்கிறார்.
நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், புற்று ரூபமாக நிர்குணமாக இருந்த அம்பாளுக்கு கவசம் சார்த்தப்படுகிறது. அந்த கவசம் சார்த்தி நாம் பார்க்கும்போது சகுண ரூபமாக உருவத்தோடு இருப்பது மாதிரி, நமக்கு தெரியும். ஆனால், அம்பாள் நிர்குணமாகத்தான் குணம் குாறிகளுக்கு அகப்படாதவள் இருக்கிறாள்.
இப்படி நிர்குண நிலையிலிருந்த அம்பாளை. சகுண நிலையில் நமக்காக காண்பித்துக் கொடுக்கக் கூடியவர் குருநாதர். சதாசிவ பிரம்மேந்திரர். மீண்டும் நிர்குணத்திற்கும் அதிலிருந்து நம்முடைய சொந்த சொரூபத்திற்கும் அழைத்துச் செல்கிறார். இந்த இரண்டையும் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து இணைத்து வைக்கிறார். இப்படியாக நிர்குண, சகுண நிலையின் உபாசனையின் முக்கியத்துவத்தை காண்பித்துக் கொடுக்கிறார். சதாசிவ பிரம்மேந்திரரே அவதூத நிலையில் இருந்தார். ஆனால், அதேநேரத்தில் பிரம்மேந்திராள் கீர்த்தனைகளும் செய்து சகுண பிரம்மத்தையும் பாடியிருக்கிறார். ஸ்தோத்திரங்களையும் செய்திருக்கிறார்.
எனவே, இந்த எட்டு நாமங்களுக்கும் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மனையே சொல்லலாம்.
(சுழலும்…)
