?எத்தனையோ இலைகள் இருக்கும் பொழுது வாழை இலையில் சாப்பிடுவது மட்டும் பொதுவாகவும் இயல்பாகவும் இருக்கிறது. வாழை இலைக்குத் தனிச் சிறப்பு உண்டா?
– சங்கீதா ரவிகுமார், திருச்சி.
முதலில் வாழை இலை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இரண்டாவதாக உணவு சாப்பிடும்படியான ஒரு அமைப்புடன் வாழையிலை அகலமாக வசதியாக இருக்கிறது. நம்முடைய உணவில் நிறைய காய்கறிகள் சாப்பாடு என்று இலை நிறைய வைத்து சாப்பிடுவதற்கு மிக வசதியானது வாழை இலை. மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. வாழை இலையில் சாப்பிடுவது தமிழர்களின் ஆரோக்கியமான பாரம்பரிய மரபாகும். இதில் சூடான உணவை உண்ணும்போது, இலையில் உள்ள குளோரோபில் மற்றும் பாலிபினால்கள் உணவில் கலந்து ஜீரணத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றுப் புண், தோல் நோய்களைக் குறைத்து பசியைத் தூண்டுகிறது. இது நச்சுத் தன்மையற்றது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது. பரிமாறும்போது இலையின் நுனி, சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும். நாம் சாப்பிடும்போது, வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால், இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை. உப்பு, ஊறுகாய், இனிப்பு கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் பரிமாற வேண்டும். சாதம், காய்கறிகள் இவற்றையெல்லாம் இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
?அதிர்ஷ்டத்தை எப்படிப் புரிந்து கொள்வது?
– ஜெ.விஸ்வநாதன், தாம்பரம்
ஒரு மரத்தில் நிறைய பழங்கள் காய்த்துத் தொங்குகின்றன. அதைப் பறிப்பதற்காக ஒருவன் கல்லால் அடிக்கிறான். சில பழங்கள் விழுந்தாலும், அங்கங்கே கிளைகளிலும் இலைகளிலும் சிக்கி இவன் கைக்கு கிடைக்காமல் போய்விட்டது. முயற்சி செய்தவன் வெறுத்துப்போய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். அரை மணி நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். இந்தப் பழத்தை எப்படி பறிப்பது என்று யோசித்தான். அப்பொழுது காற்று அடித்தது. ஏற்கனவே அங்கங்கே கிளைகளில் சிக்கியிருந்த பழங்கள் இவன் அடிக்காமலேயே கீழே விழுந்தன. இவன் எந்த முயற்சியும் செய்யாமலும், அந்தப் பழங்கள் கிடைத்தன. இதைத்தான் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும்.
?இறைவனுக்கு பால்சாதம் வைத்துப் படைப்பதில் ஏதாவது தத்துவம் உண்டா?
– தங்கபாண்டியன், மருதமலை.
பெரும்பாலான கோயில்களில் “ஷீரான்னம்’’ எனப்படும் பால் சாதம், அர்த்த ஜாம பூஜையில் நிவேதனம் செய்யப்படும். ஒரு நாட்டின் வளமைக்கு அந்த நாட்டில் உள்ள தானிய விருத்தியும் கால்நடை விருத்தியும் முக்கியம். தானிய விருத்திக்குப் பிரதிநிதியாக அரிசியும் கால்நடை விருத்திக்குப் பிரதிநிதியாக பசும் பாலும் எடுத்துக் கொண்டு இரண்டும் கலந்து எம்பெருமானுக்கு ஷீரான்னமாகப் படைப்பார்கள்.
?நவக்கிரகங்களில் சக்தி வாய்ந்தவர் யார்? சிலர் சனிதான் என்று சொல்கிறார்களே?
– மரகதம், திருவண்ணாமலை
நவகிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் சக்தி வாய்ந்த கிரகங்கள்தான். அதில் பேதம் இல்லை. சிலர் சனியைச் சொல்வதற்கு காரணம், அவர் தான் ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசி மாறுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கின்றார். இரண்டரை வருட காலங்கள் எடுத்துக் கொள்ளுகின்றார். அதனால் அவருக்கு சனைச்சரன் (மெல்ல நடப்பவர்) என்று பெயர். சிலர் இதை சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டம் சேர்த்துச் சொல்லுகிறார்கள். அது சரியல்ல. சனிபகவான், குருபகவான் என்று சொல்வதெல்லாம் உபச்சார வழக்குகள்தான்.
?வாஸ்துபடி ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டிகள் அல்லது செப்டிக் டேங்குகள் எந்த இடத்தில் இருக்க வேண்டும்?
– மு.பரமேஸ்வரன், முசிறி.
தண்ணீர்த் தொட்டி என்று வரும்போது அதனை இரண்டு வகையாக பிரிக்கலாம். சம்ப் என்று அழைக்கப்படும் தரைக்குக் கீழே அமைக்கப்படுகின்ற சுத்தமான நீரை சேமித்து வைக்கும் தொட்டியை வடக்கு அல்லது வடகிழக்கு திசையிலும் வருண மூலை என்று அழைக்கப்படும் மேற்கு திசையிலும் அமைக்கலாம். ஓவர் ஹெட் டேங்க் என்றழைக்கப்படுகின்ற மொட்டை மாடியில் கட்டமைக்கும் தொட்டி அல்லது சின்டெக்ஸ் போன்ற தொட்டிகளை தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். செப்டிக் டேங்க் என்றழைக்கப்படும் தரைக்குக்கீழே கழிவுகளை சேமிக்கும் தொட்டியினை வீட்டின் வாயு மற்றும் நிருதி மூலைகளில் அதாவது வடமேற்கு அல்லது தென்மேற்கு திசைகளில் அமைக்க வேண்டும்.
?இருதயரேகை என்பது என்ன?
– வி.மனோகரன், பட்டினப்பாக்கம் – சென்னை.
கைரேகை சாஸ்திரத்தில் இந்த இருதய ரேகைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஹஸ்த ரேகா சாஸ்திரம் என்ற நூல் கைரேகை பற்றிய அமைப்புகளைத் தெளிவாகச் சொல்கிறது. அதில் ஹ்ருதய ரேகை என்பது சுண்டு விரலுக்குக் கீழே துவங்கி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலை நோக்கிச் சென்றவாறு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இதய ரேகையானது பெரும்பாலும் இவர்களுடைய வாழ்க்கைத்துணையைப் பற்றி அறிய உதவுகிறது. அதே போல தனிப்பட்ட முறையில் அடக்கி ஆளும் தன்மை, அன்பின் மூலமாக மற்றவர்களை தன்வயப்படுத்துதல் போன்ற குணங்களையும் இந்த இதய ரேகையின் அமைப்பைக்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.
?வீட்டிற்கு முன்பாக அழைப்பு மணிக்கு பதிலாக கோயிலில் அடிக்கும் மணியைக் கட்டலாமா?
– இரா.சேவரத்தினம், ஓசூர்.
கூடாது. ஆலய மணி மற்றும் பூஜா மணிகளை அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்கச் செய்ய வேண்டும். ஆகமார்த்தம்து தேவானம் கமனார்த்தம்து ராக்ஷஸாம், கண்டாரவம் கரௌம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்சனம் என்ற மந்திரம் பூஜா மணி மற்றும் ஆலய மணியின் தாத்பரியத்தை உணர்த்தும். இந்த மணியை ஒலிக்கச் செய்வதன் மூலமாக அசுர சக்திகள் தூர விலகட்டும், தேவர்கள் இந்த இடத்திலே வந்து சேரட்டும் என்பது அதற்கான பொருள். தேவர்களை நம் இஷ்டத்திற்கு எப்போது பார்த்தாலும் அழைக்கக் கூடாது, அவ்வாறு அழைத்தால் அவர்களுக்கு உரிய ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில் மணி அடிக்கக் கூடாது. அதனால், அழைப்பு மணிக்கு பதிலாக கோயிலில் அடிக்கும் மணியை வீட்டு வாசலில் கட்டக்கூடாது.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.
