தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் முடிவுக்கு பிறகு ஒருவேளை ஆட்சியமைக்க ஆதரவு தேவைப்பட்டால் தவெக தலைவர் விஜய்யை நாடுவோம் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
கோவையில் நட்சத்திர விடுதி ஒன்றில் சேதியர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தவெக தலைவர் விஜய்யுடன் தற்போது எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக கூறி உள்ளார். எனினும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அப்போதிருக்கும் சூழலை பொறுத்து தேவைப்பட்டால் நடிகர் விஜய்யின் கட்சியின் ஆதரவு நாடுவோம் என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எங்களின் இலக்கு தனிப்பெரும்பான்மை என்றாலும் , கூட்டணியை வலுப்படுத்த விஜய்யை வரவேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா வரிசையில் பிரபலமான நடிகராக விஜய் இருந்து வருகிறார் எனவும் கூறி இருக்கிறார். முன்னதாக 2 வாரங்களுக்கு முன்பு புதுவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதும் ராம்தாஸ் அத்வாலே இதே கருத்தை கூறி இருந்தார். ஒருவேளை தேர்தலில் எங்களின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முடிவுகள் வெளியான பின் சூழலை பொறுத்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே புதுவையில் அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.
இந்த நிலையில் தற்போதும் அதே போலவே பேட்டியளித்து உள்ளார் ராம்தாஸ் அத்வாலே. தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால் விஜய் ஆதரவை நாடுவோம் என்று இப்படி வெளிப்படையாக ராம்தாஸ் அத்வாலே பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்றால் விஜயுடன், என்டிஏ கூட்டணி ரகசிய டீல் ஏற்படுத்தி கொண்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மொத்தத்தில் தேர்தலுக்குப் பின் சாதகமான முடிவு வந்தால் விஜய்யுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கிறது என்பதே ராம்தாஸ் அத்வாலேவின் பேட்டி உணர்த்துகிறது.
