×

அதிமுக முகமூடியுடன் ஆட்சியை கைப்பற்ற அலையும் பாஜ: பெ.சண்முகம் விளாசல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். சின்னதுரையை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் நேரடியாகக் காலூன்ற முடியாத பாஜக, அதிமுக மற்றும் பாமக போன்ற கட்சிகளின் துணையுடன் எப்படியாவது வெற்றி பெற்று, அதிமுக பெயரில் தமிழகத்தை ஆளத் துடிக்கிறது. அலையோ, அலையென்று அலைகிறது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் நாள்தோறும் மதக்கலவரங்களும் பெண்கள் மீதான வன்கொடுமைகளும் வேடிக்கையாகி விட்டன.

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படாத நாளே கிடையாது என்ற அவலநிலை உள்ளது. தமிழகம் அத்தகைய கலவர பூமியாக மாற வேண்டுமா அல்லது அமைதிப் பூங்காவாகத் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலாக இது அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிய மோடி அரசு, சமஸ்கிருதத்திற்கு 3,500 கோடி ரூபாய்க்கு மேல் வாரி வழங்கியுள்ளது.

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வகையில் பாஜக அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதெல்லாம் தெரிந்துதான் தமிழகத்தின் மொழி மற்றும் வளர்ச்சிக்குத் துரோகம் செய்த பாஜகவின் பெயரை உச்சரிக்கவே எடப்பாடி பழனிசாமி அஞ்சுகிறார். பாஜக என்று சொன்னால் தமிழகத்தில் வாக்கு கிடைக்காது என்பது அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இதனால், மோடியின் பெயரைத் தவிர்க்கும் எடப்பாடி பழனிசாமி, மறுபுறத்தில் பாஜகவோடு கைகோர்த்து வாக்கு கேட்டு வருகிறார்.திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லாப் பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம் போன்றவை கடைக்கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பங்களுக்குத் தேவையான மின் சாதனங்களை வாங்க 8,000 ரூபாய் கூப்பன், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்வு, மாணவர்களுக்கு மடிக்கணினி, 29 லட்சம் விவசாயிகளுக்குப் புதிய இலவச மின்மோட்டார்கள் எனப் பல்வேறு சிறப்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுன் மோதிரம் வழங்குவது போன்ற நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். தென் மாநிலங்களின் மொத்த வருவாயைக் கொண்டு வந்தாலும் இதனை நிறைவேற்ற முடியாது. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற எண்ணத்தில் இத்தகைய பொய்யான வாக்குறுதிகளை அவர்கள் அள்ளி வீசுகிறார்கள். மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே இத்தகைய கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

Tags : BAJA ,B. Sanmugham Vlasal ,Pudukkottai ,Pudukkottai District ,Kandarvakota Constituency Marxist Party ,Candidate ,M. ,Chinathura ,State Secretary ,Akhatsi ,B. Sanmugham ,BJP ,Adimuga ,Bamaka ,Tamil Nadu ,
× RELATED சிறையில் இருந்த போது எனக்கு...