×

போலி பட்டா தயாரித்து ரூ.25 லட்சம் கடன் பெற்று மோசடி வங்கி மேலாளர் கைது குடியாத்ததில்

வேலூர் ஏப்.10: குடியாத்தத்தில் போலி பட்டா தயாரித்து ரூ.25 லட்சம் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வங்கி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் தாய், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தனியார் வங்கி உள்ளது. இங்கு செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஊழியராக இருந்துள்ளார். அப்போது அவரது தாய் ஜோதி உதவியுடன் 200 சதுர மீட்டர் நிலம் தானமாக கிடைத்ததாக போலி பட்டா பத்திரம் தயாரித்துள்ளார். பின்னர் அதனை ராஜேஷ், அவரது மனைவி யோகலட்சுமி ஆகிய இருவரும் வங்கியில் வைத்து 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.17 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். அந்த பத்திரத்தை குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் ராஜேஷ் பதவி உயர்வு பெற்று ஓசூர் கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அடகு வைத்த நிலத்திற்கு கூடுதல் கடன் வேண்டி 2020ம் ஆண்டு ராஜேஷ் ரூ.25 லட்சம் கேட்டு விண்ணப்பித்தார். கடன் வழங்க ஒப்புதல் ஆனநிலையில் ரூ.25 லட்சத்தில் ஏற்கனவே வாங்கிய தொகையை கழித்து மீதமுள்ள தொகை அவரது வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவணங்களை, வங்கி நிர்வாகம் சரிபார்த்தபோது அவை போலியானவை என தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வங்கி மேலாளர் பூபாலன் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜேஷ், அவரது தாய் ஜோதி, மனைவி யோகலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜோதி மற்றும் யோகலட்சுமி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Gudiyatham ,Vellore ,Vellore district… ,
× RELATED டிஜிட்டல் கைது என மிரட்டி...