புதுடெல்லி: உணவு சமைப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மனைவியை தீவைத்து எரித்துக் கொன்ற கணவனின் ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்தது. ராஜஸ்தான் மாநிலம் பூந்தி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் என்பவருக்கும் சுக்னா பாய் என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒரே மாதத்தில், சங்கர் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு சுக்னா பாய் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கேயும் சென்ற சங்கர், தனக்கு உடனடியாக உணவு சமைத்துத் தர வேண்டும் எனக் கூறி சுக்னா பாயை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார்.
வீட்டிற்கு வந்ததும் மது போதையில் இருந்த சங்கர், சுக்னா பாயை சரமாரியாகத் தாக்கி எரித்து கொன்றார். இந்த வழக்கில் பூந்தி நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை 2019ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது சங்கர் தரப்பில், ‘சுக்னா பாயின் மரண வாக்குமூலத்தை ஏற்கக்கூடாது’ என வாதிடப்பட்டது. ஆனால், மருத்துவர் சான்றிதழ் அளித்த பிறகே வாக்குமூலம் பெறப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த வாதத்தை நிராகரித்தனர்.
இந்த தீர்ப்பின் போது நீதிபதிகள், ‘இந்தியாவில் ஏராளமான சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட போதிலும், ஆணாதிக்கம் என்பது அன்றாட எதார்த்தமாகவே உள்ளது. குடும்ப வன்முறைகளும், மனைவியை எரிப்பது போன்ற கொடூரங்களும் நோயுற்ற சமூகத்தின் அறிகுறியாகும். சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளை நெருங்கியும், அரசியல் சாசனம் வழங்கிய சம உரிமை மற்றும் வாழும் உரிமை பல பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. நகர்ப்புறங்களில் பாலினப் பாகுபாடு குறைந்திருந்தாலும், கிராமப்புறங்களில் இன்றும் குடும்ப அதிகாரம் ஆண்கள் வசமே உள்ளது.
பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும், வீட்டிற்கு வந்த பிறகு உணவு சமைப்பது உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டும் என சமூகம் எதிர்பார்க்கிறது. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.48 லட்சம் குற்றங்கள் பதிவாகியுள்ளன. பணி இடங்கள் முதல் குடும்பம் வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டாலும், பெண்களின் உடல் மற்றும் தேர்வுகளின் மீதான கட்டுப்பாடு ஏன் இன்னும் தொடர்கிறது? இதற்கான விடை இந்திய மக்களாகிய நம்மிடம்தான் உள்ளது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனைவியை தீவைத்து எரித்துக் கொன்ற கணவனின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.
