புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 2026ம் ஆண்டு காரீப் பருவத்துக்கு ஊட்டச்சத்து சார்ந்த மானியத் திட்டத்தின் கீழ் 28 வகையான உரங்களுக்கு மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
நைட்ரஜன் மானியத்தை ஒரு கிலோவிற்கு ரூ.47.32ஆகவும், பாஸ்பேட் மானியத்தை ஒரு கிலோவிற்கு ரூ.52.76ஆகவும் கந்தக மானியத்தை கிலோவிற்கு ரூ.3.16ஆகவும் உயர்த்தி வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவின் மூலமாக 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான காலத்திற்கு பொருந்தக்கூடிய மானிய விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு காரீப் பருவத்துடன் ஒப்பிடும்போது இந்த மானியம் ரூ.4,317கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
* ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 36 நிலையங்களை கொண்ட 41கி.மீ. நீளமுள்ள இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.13000கோடிக்கும் அதிகமாகும். ஒன்றிய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசு ஆகியவற்றின் 50: 50 என்ற கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்படும்.
* ராஜஸ்தான் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தின் செலவை ரூ.79,459கோடியாக உயர்த்தவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் பங்கு மூலதன ஆதரவை பெறவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு ஆலையை வருகிற 21ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆலையை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
* அருணாச்சலப்பிரதேசத்தில் இரண்டு முக்கிய நீர்மின் திட்டங்களை கட்டமைப்பதற்காக மொத்தம் ரூ.40,150கோடி முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. காம்லே, கிரா டாடி, குருங் குமே மாவட்டங்களில் கமலா நீர்மின் திட்டத்தை கட்டமைப்பதற்காக ரூ.26,069.50கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு 96மாதங்கள் ஆகும். அஞ்சாவ் மாவட்டத்தில் லோஹித் ஆற்றின் குறுக்கே அமையவுள்ள கலை-2 நீர்மின் திட்டமானது டிஎச்டிசி இந்தியா நிறுவனம் மற்றும் அருணாச்சலப்பிரதேச அரசு இடையிலான கூட்டு முயற்சியின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை 78மாதங்களில் நிறைவு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.14,105.83கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
