×

‘வெளியே போங்க’ என மம்தா கட்சியினரை விரட்டிய தலைமை தேர்தல் ஆணையர்: சந்திப்பு கூட்டத்தில் அடாவடி சம்பவம்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வாக்குரிமை பறிக்கப்பட்டது மற்றும் பாஜவுடன் தேர்தல் ஆணையத்திற்கு மறைமுக உடன்பாடு இருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன், துணைத் தலைவர் சாகரிகா கோஸ், எம்பிக்கள் சாகேத் கோகலே, மேனகா குருசாமி ஆகியோர் கொண்ட பிரதிநிதிகள் குழு மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

7 நிமிடங்களில் முடிந்த இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன், ‘‘சில தேர்தல் அதிகாரிகளுக்கு பாஜவுடன் தொடர்பிருப்பதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து உதாரணங்களை சுட்டிக் காட்டினோம். இப்படிப்பட்ட களங்கப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் தேர்தல் எப்படி சுதந்திரமாக நியாயமாக நடக்கும் என கேட்டோம். அதற்கு தலைமை தேர்தல் ஆணையர், ‘வெளியே போங்க’ என்பது போல் பதிலளித்தார்’’ என குற்றம்சாட்டினார்.

ஆனால் எக்ஸ் தளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பதிவில், ‘‘ஆணைய அறையில் கண்ணியத்தை கடைபிடிக்குமாறு டெரெக் ஓ பிரையனிடம் தலைமை தேர்தல் ஆணையர் கேட்டுக் கொண்டார். கத்துவதும் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்வதும் பொருத்தமற்றது’’ என கூறப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் குழு மனு அளித்த பிறகு டெரெக் ஓ பிரையன் சத்தமாக பேசுவதாக குற்றம்சாட்டிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களை ‘வெளியே போங்கள்’ என கூறியதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Chief Election Commissioner ,Mamata ,New Delhi ,West Bengal ,Election Commission ,BJP ,Trinamool Congress ,Rajya Sabha… ,
× RELATED கேரளா, அசாம், புதுச்சேரிக்கு இன்று...