×

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பும் சிஎஸ்கே: ரூ.14.2 கோடிக்கு எடுத்த வீரருக்கு பவுலிங் கொடுக்காதது ஏன்?: முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சாடல்

சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த ஐபிஎல் தொடரின் 11வது போட்டியில், சென்னை-ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய சென்னை அணி 207 ரன்களுக்கு சுருண்டு, 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரு அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் சென்னை அணியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:

சிஎஸ்கேவிடம் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். ஏன் நீங்கள் பிரஷாந்த் வீரை பந்துவீச அனுமதிப்பதில்லை. சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான பிரஷாந்த் வீரை 14.2 கோடிக்கு எடுத்து பவுலிங் கொடுக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது. அவருக்கு பந்துவீச வாய்ப்பளிக்கவில்லை என்றால் இவ்வளவு தொகை கொடுத்து அவரை எடுத்து என்ன பயன். மூன்று போட்டிகள் கடந்துவிட்டன. ஒரு ஓவர் அல்லது இரண்டு ஓவர்கள் அவருக்கு பவுலிங் கொடுத்து பார்ப்பதில் உங்களுக்கு என்னதான் பிரச்சனை.

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ஜேமி ஓவர்டனை அணியிலிருந்து நீக்கியது பெரும் தவறு. போட்டி முடிந்ததும் சிஎஸ்கே இது குறித்து வருந்தியிருக்கும். அணியின் தேர்வு முறை சரியானதாக இல்லை. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணி ஏன் அணியை தேர்வு செய்வதில் இவ்வளவு தடுமாறுகிறது? பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் ஜேமி ஓவர்டனை கடந்த போட்டியில் ஏன் நீக்க வேண்டும். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில், ஜேமி ஓவர்டன் 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். பவுலிங்கில் 3 ஓவர்களில் 1/42 ரன்கள் கொடுத்தார். அவரை நீக்கியதற்கான காரணம் எனக்கு விளங்கவில்லை. முதல் மூன்று போட்டிகளிலும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் என்ன செய்தார்கள்? சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் கெய்க்வாட், தொடர்ந்து சொதப்பினால் அணி எப்படி வெற்றி பெறும்?

அயூஷ் மத்ரேவும், சர்பராஸ் கானும் ஓரளவு ரன் சேர்த்தாலும், டாப் ஆர்டர் சரியும் அணியும் சரியத்தான் செய்யும். சாம்சன் மற்றும் கெய்க்வாடின் அனுபவம் அணிக்கு இதுவரை எந்தவித நன்மையும் தரவில்லை. சர்பராஸ் கான் அருமையாக விளையாடினார். சர்பராஸ் பேட் செய்த விதம் முற்றிலும் அபாரமாக இருந்தது. ஆனால் அவர் ஒருவரால் மட்டும் எப்படி அணிக்கு வெற்றி தேடி தர முடியும்? அணியை கட்டமைக்காமல் அணி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. என்று ஆகாஷ் சோப்ரா கடுமையாக சாடியுள்ளார்.

Tags : CSK ,IPL ,Akash Chopra ,Chennai ,IPL 2026 ,Bengaluru ,RCB ,Chennai… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு...