- காங்கிரஸ்
- பாக்கிஸ்தான்
- அசாம்
- முதல்வர்
- குவஹாத்தி
- முதல் அமைச்சர்
- ஹிமந்தா பிஸ்வா சர்மா
- அசாம் பாஜக
- ரினிகி புயான் ஷர்மா
கவுகாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி மீதான பாஸ்போர்ட் புகாரில் பாகிஸ்தான் சமூக வலைதள கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மாவுக்கு வெளிநாட்டு பாஸ்போர்ட் இருப்பதாகவும், துபாய் மற்றும் அமெரிக்காவில் ரகசிய முதலீடுகள் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கெரா மற்றும் கவுரவ் கோகாய் ஆகியோர் ஏற்கனவே குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மனைவி சார்பில் ஏற்கனவே போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அசாமில் வரும் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தன் மீதான புகார்களுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் ஒரு முக்கிய ஆதாரத்தை வெளியிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர்கள் பவன் கெரா மற்றும் கவுரவ் கோகாய் ஆகியோர் எனது மனைவிக்கு எதிராக காட்டிய ஆவணங்கள் அனைத்தும் ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. இந்த ஆவணங்கள் அனைத்தும் பாகிஸ்தான் சமூக வலைதள குழுக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த டிப்பு சுல்தான் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அசல் ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் படத்தை எடுத்து, அதில் திருத்தம் செய்து மோசடி செய்துள்ளனர். அதேபோல் எகிப்து நாட்டின் பாஸ்போர்ட் படமும் போலியானது. கூகுள் ரிவர்ஸ் மூலம் தேடிப் பார்த்தால் இதன் உண்மைத்தன்மை தெரியவரும். யார் வேண்டுமானாலும் 199 டாலர் செலுத்தி வெளிநாட்டில் நிறுவனத்தைப் பதிவு செய்ய முடியும். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு, எனது மனைவி பெயரில் மற்றொரு நிறுவனத்தை அவர்கள் போலியாக உருவாக்கியுள்ளனர். அசாம் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இதற்கு கவுரவ் கோகாய் உதவி செய்கிறார். தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் பொய்யான ஆவணங்களை தயாரித்து பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.
