×

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக மே 31-ம் தேதி வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்திய விமானங்கள் ரத்து

 

டெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் நிலையில், வருகின்ற மே 31-ம் தேதி வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பயணிகளின் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா. இந்த அறிவிப்பு இஸ்ரேலில் வசிக்கும் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிப் பயணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் வருகின்ற மே 31-ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேலை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து இந்தியா வர விரும்பும் இந்தியர்கள், மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஸ்ரேலில் இருந்து இந்தியா வர விரும்புபவர்கள், எகிப்து அல்லது ஜோர்டான் நாடுகளின் நில எல்லைகள் வழியாக சென்று அங்கிருந்து விமானத்தின் மூலம் இந்தியா திரும்பலாம் என ஆலோசிக்கப்படுகிறது. டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது

டெல்லி – டெல் அவிவ் இடையிலான நேரடி விமான சேவை மே 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு, இப்பகுதியில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அபாயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, பல சர்வதேச விமான நிறுவனங்களும் டெல் அவிவ் வழித்தடத்தில் சேவைகளை நிறுத்தியுள்ளன. சில இஸ்ரேல் விமான நிறுவனங்கள் மட்டுமே கடுமையான கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன என தெரிவித்தனர்.

இதற்கிடையில் டெல் அவிவ்-ல் இருக்கும் இந்திய தூதரகம், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. 24 மணி நேர அவசர உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பெரிய அளவிலான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை அடையாளம் காணவும் இந்திய தூதரகத்திற்கு உதவுகிறது.

டெல்லி – டெல் அவிவ் நேரடி விமான சேவை, 2025 ஜனவரி 1ஆம் தேதி பெரும் இடைவெளிக்கு பின்பு மீண்டும் தொடங்கப்பட்டது. வாரத்திற்கு நான்கு சேவைகள் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் மூலம் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்த சேவைகள் படிப்படியாக பாதிக்கப்பட்டு தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Air India ,Middle East ,Delhi ,US ,Israel ,Iran ,
× RELATED மனைவி பெயரில் வெளிநாட்டு பாஸ்போர்ட்;...