×

தோட்டத்திலிருந்து கொய்யா பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கிய முன்னாள் ராணுவ வீரர்.!!

இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தனது தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களைப் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலானதை தொடர்ந்து தனது வீட்டு தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களை பறித்த 4 வயது சிறுமியை, கட்டி வைத்து தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் அத்துமீறல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகளான பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, படிக்கட்டுகளில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் உதவி கோரி கெஞ்சும் காட்சி அடங்கிய வீடியோ அண்மையில் வைரலாக பரவியது. முன்னாள் ராணுவ வீரரான குறிப்பிட்ட அந்த வீட்டின் உரிமையாளர், தனது தோட்டத்தில் கொய்யாப்பழங்களை பறித்த அந்த சிறுமியை பிடித்து வீட்டிற்குள் இழுத்து வந்து, அச்சிறுமியின் கைகளையும் கால்களையும் சங்கிலிகொண்டு கட்டி வைத்ததோடு, அந்த சிறுமியை தாக்கவும் செய்து உள்ளார். இந்த விஷயம் குறித்து அறிந்த சில கிராமவாசிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.

மீட்பு நடவடிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோவே பின்னர் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் போது, அந்த சிறுமி உதவிக்காகக் கதறி அழுவதும், “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கூக்குரலிட்டு கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஈவு இரக்கமின்றி சிறுமியை கட்டி வைத்து தாக்கிய அந்த முன்னாள் ராணுவ வீரர் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தினரிடம் தனது தவறை ஒப்புக்கொண்டு, பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார். குழந்தையின் நிலையைக் கண்டவுடன், நான் உடனடியாகக் குழந்தைகள் நல உதவி மையத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தேன் என்று அந்த முன்னாள் ராணுவ வீரரிடம் சிறுமியை கொடுமைப்படுத்துவது தொடர்பாக நேருக்கு நேர் சண்டையிட்ட ரோஹித் என்ற நபர் கூறினார்.

கிராம மக்கள் ஒருபக்கம், அதிகாரிகள் ஒருபக்கம் என கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “நான் தவறு செய்துவிட்டேன்; அந்தச் சிறுமியிடமும், அவளது குடும்பத்தினரிடமும், அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது போல மீண்டும் நடக்காது,” என்று பேசினார். இதனிடையே உள்ளூர் காவல் அதிகாரிகள் BNS மற்றும் ‘சிறுவர் நீதிச் சட்டம்’ ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அந்த முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியான பின்னரும், 112 என்ற அவசர உதவி எண் மூலம் புகார் பெறப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Tags : Una district, Himachal Pradesh ,
× RELATED திருமணமான இளம்பெண் தனது காதலனுடன் சேர்ந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி