×

தளி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு தாக்கிய கணவரை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி

*கைது செய்து போலீசார் விசாரணை

தேன்கனிக்கோட்டை : தளி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு, போதையில் தகராறு செய்து தாக்கிய கணவனை, கட்டையால் அடித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே முத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசரெட்டி(48). இவரது மனைவி நவீனா(38). கூலி தொழிலாளியான பிரகாசரெட்டிக்கு குடிப்பழக்கம் இருந்தது.

இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் நவீனாவின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரகாசரெட்டி, மனைவியுடன் தகராறு செய்து நடத்தை தொடர்பாக தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும், நவீனாவின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்று, அதே பகுதியில் வசிக்கும் அவரது தாய் வீட்டின் முன் வைத்து, சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த நவீனா, ஆத்திரத்தில் அருகில் இருந்த கட்டையை எடுத்து, பிரகாசரெட்டியின் தலை, வாய் பகுதியில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பிரகாசரெட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, தலையில் ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவரை உறவினர்கள் மீட்டு, ஆனெக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, எஸ்ஐ ராஜசங்கிலிகருப்பன் மற்றும் போலீசார், பிரகாசரெட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், முத்தூர் கிராமத்திற்கு சென்று நவீனாவை கைது செய்தனர். அவரை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு தாக்கிய கணவரை, இளம்பெண் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Thali ,Thenkanikkottai ,Prakasareti ,Muthur ,Thali, Krishnagiri district ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது