×

ஒடிசா மாநில உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்கு அதிகரிப்பு: ஓபிசிக்கு இடஒதுக்கீடு அறிமுகம்

புவனேஷ்வர்: ஒடிசாவில் உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் தற்போது மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர் சேர்க்கைக்கான இடங்களை இரு மடங்காக உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக மற்றும் பொருளாதார ரீதியான பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வௌியிட்ட அறிக்கையில், “மாநிலத்தில் 22 சதவீதத்துக்கும் அதிகமாக பட்டியலின மக்கள் இருந்தாலும், அவர்களுக்கு நீண்டநாள்களாக தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் அதுசார்ந்த படிப்புகளில் 12 சதவீத இடங்களே ஒதுக்கப்பட்டு வந்தன. இதனால் மாநிலத்தில் மொத்தமுள்ள 2,421 இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ இடங்களில் 290 மாணவர்கள் மட்டுமே சேர முடியும். தற்போது இந்த இடஒதுக்கீடு 12 சதவீதத்தில் இருந்து 22.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் 545 பட்டியலின மாணவர்கள் மருத்துவ இடங்களை பெற முடியும். இதேபோல் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 8 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே இருப்பதால், 190 மாணவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டின்கீழ் சேர முடியும். தற்போது இது 8 சதவீதத்தில் இருந்து 16.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 393 மாணவர்கள் இடஒதுக்கீட்டில் பயன்பெற முடியும்.

மேலும், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சமூக மற்றும் பொருளாதார ரீதியான பின்தங்கிய(எஸ்இபிசி எனப்படும் ஓபிசி) மாணவர்களுக்கு 11.25 சதவீத இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதன்முறையாக எஸ்இபிசி மாணவர்களுக்கு 515 இடங்கள் ஒதுக்கப்படும். மாநில அரசின் இந்த நடவடிக்கை வளமான ஒடிசாவை உருவாக்க வலுவான வழிமுறையாக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Odisha ,OBC ,Bhubaneswar ,BJP ,Mohan Charan ,
× RELATED மனைவி பெயரில் வெளிநாட்டு பாஸ்போர்ட்;...