கோவை,ஏப்.5:அடுக்குமாடி குடியிருப்பில் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பீளமேடு, நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 5வது மாடியில் வசித்து வந்தவர் கோபிகிருஷ்ணன் (55). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கோபிகிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை கோபிகிருஷ்ணன் வீட்டின் 5வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்தார். அதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பட இடத்துக்கு வந்து கோபிகிருஷ்ணனின் உடலை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபிகிருஷ்ணன் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
