மேற்குவங்க மாநிலத்தில் வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி மேற்குவங்க மாநிலம் முழுவதும் பயணித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மால்டா மாவட்டத்தில் உள்ள மாலதிப்பூருக்கு ஹெலிகாப்டரில் வந்திருந்தார்.
மம்தா பானர்ஜி வந்த ஹெலிகாப்டருக்கு அருகே ஒரு சந்தேகத்திற்குரிய ட்ரோன் (ஆளில்லா விமானம்) தென்பட்டது பெரும் பரபரப்பை அங்கு ஏற்படுத்தியது. மாலதிப்பூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, ஹெலிகாப்டரில் புறப்பட்ட போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியே அந்த ட்ரோனை நேரில் கண்டார். உடனடியாக, சம்பவ இடத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளை அழைத்து, அந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சம்பவ இடத்திலேயே உத்தரவிட்டார்.
உயர் காவல் அதிகாரிகளை அருகே அழைத்து பேசிய மம்தா, “காவல்துறையினர் இது போன்ற விஷயங்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை விரைவில் அடையாளம் காண வேண்டும், உடனே விசரணையை துவக்குங்கள்” என்று கூறினார். மாலதிப்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் முடிந்ததும், மம்தா தான் அடுத்து பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டிய இடமான கஜோலுக்குப் புறப்பட ஆயத்தமானார். அந்த நேரத்தில் தான் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிபேடிற்கு முன்பாக ஒரு ட்ரோன் பறந்து கொண்டிருப்பது மம்தா உள்ளிட்ட அங்கிருந்தவர்களின் கண்களுக்கு தென்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த மர்ம ட்ரோன் மம்தாவின் ஹெலிகாப்டருக்கு அருகில் எவ்வாறு வந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை முன்னதாக கடந்த மார்ச் 26 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பயணித்த விமானம் கடும் மழை மற்றும் சூறாவளியால், கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது.
