×

சமாதானம் பேசினாரு… வேட்பாளரா ஆனாரு…

கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் களத்தில், தற்போது பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது தளி சட்டமன்ற தொகுதி. அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி பாஜவிற்கு தான் என்று, ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதில் பாஜ சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார்? என்பது மர்மமாகவே இருந்தது. நயினார் ஆதரவாளரான மாவட்ட தலைவர் நாராயணனும், அண்ணாமலை ஆதரவாளரான மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டியும் மல்லுக்கட்டினர்.

இதில் வெளியூர்காரரான அமர்பிரசாத் ரெட்டி, உள்ளூர் மாவட்ட தலைவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, வாலண்டிரியாக வந்து ஆதரவு திரட்டினார். இது கட்சி மட்டத்தில் கடும் புகைச்சலை கிளப்பியது. ஏற்கனவே வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு இழுத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த மோதல் கட்சி தலைமைக்கு தலைவலியானது. வேட்பாளர் யார்? என்பதை நீங்களே பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டது.

இந்த வகையில் இருதரப்புக்கும் பஞ்சாயத்து பேசவந்தவர், தற்போது தளி தொகுதி பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினர் மத்தியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து உள்ளூர் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பாஜ வெளியிட்ட பட்டியலில் தளி தொகுதி வேட்பாளராக டாக்டர் நாகேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கட்சியில் மேற்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார்.

தளியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் வாக்கு வங்கி சதவீதம் சற்று அதிகமாக உள்ளது. இந்த சமூகம் சார்ந்த வேட்பாளர்களே பிரதான கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதில் புதிதாக போட்டியிட ஆர்வம் காட்டிய அமர்பிரசாத் ரெட்டி, வெளிமாநிலத்துக்காரர் என்பதோடு, குறிப்பிட்ட சமுதாய பின்புலமும் இல்லாதவர். மேலும் அப்பட்டமாக நடக்கும் கோஷ்டி மோதல், தேர்தலில் பெரும் பின்னடைவை தரும். இதை இரு தரப்பிடமும் எடுத்துக்கூறி சமாதானம் செய்யும் வேலையில் இறங்கியவர் தான் நாகேஷ்குமார்.

இப்படி சமாதானம் பேசியவர், இப்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நாகேஷ்குமார், கடந்த 2021ம் ஆண்டு, அதிமுக கூட்டணியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு 64,415 வாக்குகள் பெற்றார். அதையே சமாதான பேச்சுவார்த்தையின் போது, அழுத்தம் திருத்தமாக கூறிவந்தார். இது ஒருபுறமிருக்க, திமுக கூட்டணி தொடர்ந்து தளியில் வெற்றியை தக்கவைத்து வருகிறது. தற்போது அரசின் திட்டங்கள் தொகுதி முழுவதும் பரவலாக சென்று சேர்ந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் இந்த தொகுதியில் நடப்பு தேர்தலில் நமது ஜம்பம் பலிக்காது என்று இரு கோஷ்டிகளும் முடிவு செய்தது. அதனால் சமாதானம் பேச வந்தவரையே பலிகடாவாக்கி உள்ளது. வேட்பாளரும் ஏற்கனவே செல்வாக்கு பெற்றவன் நான் என்ற ரீதியில் வலம் வரத்தொடங்கியுள்ளார். இதில் அண்ணாமலை ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டிக்கு கல்தா கொடுத்துவிட்டு, நயினார் ஆதரவாளர் நாகேஷ்குமார் வேட்பாளர் ஆகியுள்ளார் என்பதும் டுவிஸ்ட்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

Tags : Krishnagiri district ,Thali Assembly Constituency ,Adimuga ,BJP ,Baja ,
× RELATED விஜய்யை விமர்சிக்க மாட்டேன்: கணவனை போல் குஷ்புவும் ‘ஜகா’