- ஊருக்கம்
- ஜெயலலிதா
- அஇஅதிமுக
- பொது
- எடப்பாடி பழனிசாமி
- தனபால்
- பேரவையின் சபாநாயகர்
- அவிநாசி
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- பாஜக
- மாநில மத்திய அமைச்சர்
அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் சபாநாயகராக இருந்த தனபாலுக்கு, இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அவினாசி தொகுதியில் போட்டியிட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கவில்லை. அவினாசி தொகுதியை கூட்டணி கட்சியான பாஜவிற்கு ஒதுக்கி கொடுத்து, அங்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். மாஜி சபாநாயகர் தனபாலை கடந்த 6 மாதமாக ஒதுக்கி வைக்கும் முடிவில் அதிமுக தலைமை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் அவரது மகன் லோகேஷ் தனபால், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்து, தற்போது ராசிபுரம் (தனி) தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்தச்சூழலில் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தை மாஜி சபாநாயகர் தனபால், சமூகவலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தனது அரசியல் பிரவேசம், எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த உதவிகள், தன்னை மேல் நோக்கி அழைத்துச் சென்ற பாங்கை பெரிய அறிக்கையாக வெளியிட்டுள்ள அவர், மற்றொரு போஸ்டையும் பேஸ்புக், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தவிக்கும் தனபாலுக்கு முதலுதவி சிகிச்சைக்கு ஜெயலலிதா ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்துடன், ‘‘1988, சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது. விபரம் அறிந்த அம்மா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அம்மாவின் அன்பு, என்றும் அம்மாவின் நினைவில்,’’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘6 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என்னை அதிமுக சார்பில் யாரும் பார்க்கவரவில்லை. போனில் கூட விசாரிக்கவில்லை. ஆனால், 1988ல் எனக்கு கால்முறிவு ஏற்பட்டபோது, அம்மா செய்த உதவியை நினைத்து பார்க்கிறேன். தாயில்லா நிலையை நான் இப்போது உணர்கிறேன். இந்த தேர்தலில் போட்டியிட நான் கட்சி தலைமையிடம் சீட் கேட்டேன். ஆனால், எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை.
ஆனால், உடல்நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் தான், என் மகன் தவெகவிற்கு சென்று, ராசிபுரத்தில் போட்டியிடுகிறான்,’’ எனக் கூறியிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த முன்னோடியான மாஜி சபாநாயகர் தனபாலை ஓரம் கட்டியிருப்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்து, தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், திமுகவில் மூத்த முன்னோடியான கரூர் கே.சி.பழனிசாமியை தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து நலம் விசாரித்து வந்ததை பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு, இது தான் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், திமுகவிற்கும், அதிமுகவிற்கும் உள்ள வித்தியாசம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
