×

மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்: ஆம்பூர் அருகே பயங்கரம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகனை போலீசார் தேடிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் தேவலாபுரத்தை சேர்ந்தவர் ரவி (56). இவரது மகள் கிருத்திகா. இவரை அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ்குமார் (33) என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியருக்கு 4 வயதில் மகனும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தம்பதியரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கிருத்திகா, தாய் வீட்டிற்கு வந்துவிட்டாராம்.  இந்நிலையில் நேற்றிரவு கிருத்திகாவுக்கும், சதிஷ்குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து அங்கு அமர்ந்திருந்த மாமனார் ரவியை சுட்டார். இதில் ரவியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ரவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் எஸ்பி சியாமளாதேவி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த உம்ராபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ambur ,Ravi ,Devalapuram, Madanur Panchayat Union ,Ambur, Tirupattur district ,Krithika ,
× RELATED கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட...