×

திருச்சி அருகே பயங்கரம் திமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை: 9 பேர் கும்பலுக்கு வலை

திருவெறும்பூர்: திருச்சி அருகே பேரூராட்சி திமுக கவுன்சிலரை வெட்டி கொலை செய்த 9 பேர் கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (38). கூத்தைப்பார் பேரூராட்சி 11வது வார்டு திமுக கவுன்சிலர். கூத்தைப்பார் பேரூர் திமுக இளைஞரணி செயலாளராகவும் இருந்தார். திருவெறும்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வந்த இவர், கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் சோழமாநகரில் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரஞ்சித்குமார், தொழில் பார்ட்னரை சந்தித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். திருவெறும்பூர் புதுத்தெரு அருகே நவல்பட்டு சாலையில் சென்றபோது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து கட்டையால் தாக்கி, அரிவாளால் உடல் முழுவதும் சரமாரி வெட்டியதுடன் தலையை வெட்டி சிதைத்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த ெகாலை சம்பவம் குறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் போலீசார், ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல், கைரேகை நிபுணர்கள மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டது. எஸ்பி செல்வ நாகரத்தினம், திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டதில் மூன்று பைக்குகளில் 9 பேர் கொண்ட கும்பல், இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 9 பேர் கும்பலை தேடி வருகின்றனர். அவர்கள் 9 பேரும், கூலிப்படையை சேர்ந்தவர்களா? இவர்களை ஏவி விட்டது யார்? என பல்வேறு கோணங்களில் 8 தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : DMK ,Trichy ,Thiruverumpur ,Ranjith Kumar ,Bharathipuram, Koothipar ,Thiruverumpur, Trichy district ,Ward 11 ,Koothipar ,panchayat… ,
× RELATED திருமணம் ஆகாமல் கர்ப்பம் சுயமாக...