×

ஈரானுடனான போருக்கு இடையே அமெரிக்க ராணுவ தலைமை தளபதி அதிரடி நீக்கம்: பாதுகாப்பு செயலாளர் ஹெக்சேத் உத்தரவு

வாஷிங்டன்: ஈரான் மீதான போர் குறித்து நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “ ஈரானின் புதிய தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் ஈரானின் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி, ஈரானை கற்காலத்துக்கு அழைத்து செல்வோம். அதேநேரம் இந்த போரை மிக விரைவில் அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வரும்” என காலக்கெடு எதுவுமின்றி தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால், ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கத்துக்கான எந்த காரணமும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து பென்டகனின் உயர்மட்ட செய்தி தொடர்பாளர் சீன் பார்னெல் தன் சமூக ஊடகத்தில், “அமெரிக்க ராணுவத்தின் 41வது தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் உடனடியாக பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அவர் நமது தேசத்துக்கு ஆற்றிய தசாப்த கால சேவைகளுக்கு அமெரிக்கா நன்றியுடன் இருக்கும். ஜார்ஜின் ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். மேலும், ராணுவ ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் ராணுவ மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியேரையும் பதவி நீக்கம் செய்து பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் உத்தரவிட்டுள்ளார்.

* ராண்டி ஜார்ஜ் பற்றி..
வெஸ்ட் பாயின்ட் ராணுவ பயிற்சி மையத்தில் பட்டம் பெற்ற ராண்டி ஜார்ஜ், கடந்த 2023ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் ராணுவ தலைமை தளபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் நீடிக்க வேண்டியது. ராண்டி ஜார்ஜ் வளைகுடா போர், ஆப்கானிஸ்தான் போர், ஈரான் போர்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். முன்னதாக, பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினின் மூத்த ராணுவ ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

Tags : US Army ,Chief of Staff ,Iran ,Defense Secretary ,Washington ,US ,President Trump ,
× RELATED வன்முறையும், போரும் நிறைந்த உலகில்...