×

செவ்வாய்க்கிழமை ஈரானுக்கு முடிவு கட்டப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: செவ்வாய்க்கிழமை ஈரானுக்கு முடிவு கட்டப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் ‘ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிடில் ஈரானில் உள்ள மின்நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும்’ என ஹோர்முஸ் நீரிணையை திறக்க 10 நாள் விதிக்கப்பட்ட கெடு முடிவடையும் நிலையில் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், ஈரானுக்கு எதிராக மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ஜலசந்தியைத் திறக்க தான் விதித்த காலக்கெடுவை நினைவூட்டிய அவர், வரவிருக்கும் செவ்வாய்க்கிழமை ஈரானின் எரிசக்தி மற்றும் சிவில் உள்கட்டமைப்புகள் அழிக்கப்படும் நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டதாவது: “ஈரானில் செவ்வாய்க்கிழமை என்பது மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும் நாளாக இருக்கும். இது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருக்கும்!!! அந்த ஜலசந்தியைத் திறங்கள், இல்லையெனில் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்! இறைவனுக்குப் புகழ் உண்டாகட்டும்.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சனிக்கிழமையன்று, ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வர அல்லது ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க 48 மணிநேரம் மட்டுமே உள்ளதாக டிரம்ப் நினைவூட்டினார். இந்த 10 நாள் கெடு முடிவதற்குள் தீர்வு காணப்படாவிட்டால், “ஈரான் மீது நரகம் மழையாகப் பொழியும்” என்று அவர் எச்சரித்திருந்தார்.

கடந்த மார்ச் 26 அன்று, ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை ஏப்ரல் 6, 2026 (திங்கட்கிழமை) இரவு 8 மணி வரை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தற்போது அந்த காலக்கெடு முடிவுக்கு வருவதால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

Tags : Iran ,US ,Chancellor ,Trump ,WASHINGTON ,U.S. ,PRESIDENT TRUMP ,Strait of Hormuz ,
× RELATED தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில்...