திருமலை: கொடுத்த கடனை திரும்ப கேட்ட தகராறில் கள்ளக்காதலியை கொலை செய்து முள்புதரில் வீசிய வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரம்மா(35). கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். டெய்லர் வேலை செய்வதோடு, ஏலச்சீட்டு பிடிப்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற வேலைகளையும் செய்து மகன், மகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம்(20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சினிமா, கோயில் திருவிழா என்று பைக்கில் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். இந்த பழக்கத்தில் சுப்ரமணியம், கள்ளக்காதலி சந்திரம்மாவிடம் கடன் வாங்கியுள்ளார். சிறிது நாட்களுக்கு பிறகு கொடுத்த பணத்தை சந்திரம்மா வட்டியுடன் திருப்பி கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நகை வாங்கி தருகிறேன் எனக்கூறி சந்திரம்மாவை சுப்பிரமணியம் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது அங்கு ஏற்கனவே இருந்த சுப்ரமணியம் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து சந்திரம்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை முட்புதரில் வீசிவிட்டு ஊருக்கு திரும்பினார்.
இதற்கிடையே சந்திரம்மாவை 2 நாட்களாக காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரம்மாவை கொலை செய்து வீசியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சுப்பிரமணியம் மற்றும் உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
