×

துரைமுருகன், எடப்பாடி, செல்லூர் ராஜூ காரில் பறக்கும் படையினர் சோதனை

வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் நேற்று காலை பொன்னை அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட காரில் சென்று கொண்டிருந்தார். பொன்னை நான்கு ரோடு பகுதியில், அமைச்சர் துரைமுருகன் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி 10 நிமிடங்கள் சோதனை நடத்தினர்.பெற்றது. பின்னர் அமைச்சர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல், எடப்பாடி பழனிசாமி வாகனம் மானாமதுரை சாலையில் சிவகங்கை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது சிவகங்கை அருகே சாமியார்பட்டி விலக்கில் பறக்கும் படை குழுவினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர்களிடம் சீக்கிரம் சோதனையை முடித்து அனுப்புங்கள், பிரசாரத்திற்கு நேரமாகி விட்டது என எடப்பாடி தெரிவித்தார். சுமார் 5 நிமிடம் சோதனை செய்த பறக்கும்படையினர் பின்னர் வாகனத்தை அனுப்பி வைத்தனர். மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ, தொகுதியின் எல்லை கிராமமான தாராப்பட்டி மந்தையம்மன் கோயிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை துவங்கினார். கொ.புதூரில் இருந்து கொடிமங்கலம் வந்தபோது, தேர்தல் பறக்கும் படையினர் செல்லூர் ராஜூவின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் பணம் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர்.

* தண்டவாளத்தில் தலை வைத்து ஹாயாக படுத்த மன்சூர் அலிகான் மீது வழக்கு
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகரும், சமூக ஆர்வலருமான மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரச்சாரத்திற்காக லால்குடி வந்த மன்சூர்அலிகான், திடீரென கல்லக்குடி ரயில் நிலையம் வந்தார். தொடர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் சிறிது தூரம் நடந்து சென்றபோது அவர், திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.

அப்போது, தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து கலைஞர், இதே கல்லக்குடியில் இப்படி தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அதே போலத்தான் நானும் இதே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து இங்கிருந்தே தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாக திருச்சி ரயில்வே போலீசாரிடம் மன்சூர் அலிகான் தெரிவித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அஜய்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே இடத்துக்குள் அத்துமீறி நுழைதல், இடையூறு ஏற்படுத்தி அநாகரீகமாக நடந்து கொள்ளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் லால்குடி தொகுதி வேட்பாளர் மன்சூர் அலிகான் மீது ரயில்வே போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* மேட்டூர் தவெக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு: ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பிய தொண்டர்கள்
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக செல்வம் போட்டியிடுகிறார். இவர் நேற்று நிர்வாகிகளை சந்திக்க மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிலர், அவருக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்து அவரது காரை மறித்தனர். மேலும், அவரை ஊருக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பினர். அப்போது அவருடன் வந்திருந்த மற்ற நிர்வாகிகள், அப்பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் சமாதான பேச்சு நடத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கு நாங்கள் ரூ.200க்கு முன்பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட்களை எங்களிடம் இருந்து திரும்பப் பெற்று அதனை எங்களுக்கே அதிக விலைக்கு ரூ.350க்கு விற்றதாகவும், அதேபோல் ஒருதலைபட்சமாக வேட்பாளர் செல்வம் செயல்படுவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தமிழக வெற்றி கழகம், தற்போது முதல்முறையாக தேர்தலை சந்திக்கிறது. ஆனால் தற்போதே மேட்டூர் சட்டமன்ற தொகுதியில், தவெக வேட்பாளர் செல்வத்திற்கு கடும் எதிர்ப்பு, அவர்கள் கட்சியிலேயே எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Durai Murugan ,Edappadi ,Sellur Raju ,Minister ,Katpadi ,Vellore district ,Ponnai ,Election Flying Squad ,
× RELATED நான் ஒரு மலையாளி கேரளாவில் ராகுல் பெருமை