×

நான் ஒரு மலையாளி கேரளாவில் ராகுல் பெருமை

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். கடந்த 30ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களிலும், நேற்று முன்தினம் கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் செய்தார். கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டியில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘5 வருடங்கள் வயநாட்டின் எம்பியாக இருந்த நான் ஒரு மலையாளி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். உடல் நலமில்லாமல் இருக்கும் என்னுடைய தாய் சோனியா காந்தியின் அருகில் இருந்து தான் நான் இப்போது வருகிறேன். என்னுடைய தாயை கேரளாவைச் சேர்ந்த நர்சுகள் தான் கவனித்து வருகின்றனர். அதனால் தான் நான் எந்தக் கவலையும் இல்லாமல் உங்களுடன் இருக்கிறேன். என்னுடைய இக்கட்டான நேரங்களில், நான் வீழ்ந்து விடுவேனோ என்று கவலையில் இருந்த நாட்களில் எனக்கு நீங்கள் தான் கை கொடுத்து உதவினீர்கள். அந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்’’ என்றார்.

* வாக்காளர்களுக்கு இலவச ஊபர் சவாரி
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 85 வயதுக்கு மேல் ஆனவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இந்தத் தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்கும் வாலிப வயதினருக்கு அல்வா வழங்க மாநில தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையத்திற்கு கொண்டு வருவதற்காக இலவச ஆட்டோ, டாக்சி, பைக் சேவையை ஏற்படுத்த கேரள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஊபர் நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் வழக்கமாக குறைந்து காணப்படும் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பூத்துகளுக்கு செல்ல இந்த சேவை கிடைக்கும்.

தேர்தல் நாளன்று வீட்டிலிருந்து 2 கிமீ தூரம் வரை உள்ள பூத்துகளுக்கு செல்ல வாக்காளர்கள் இலவசமாக ஊபரின் ஆட்டோ, டாக்சி மற்றும் பைக் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். 2 கிமீக்கு மேல் உள்ள பூத்துகளுக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்குரிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.ஊபர் இந்தியா நிறுவனமும், மாநில தேர்தல் ஆணையம் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கான செலவையும் இந்த இரு நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளும். இந்த இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளின் லொகேஷன்களும் ஊபரின் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளர்களும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் தெரிவித்துள்ளார்.

* வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வலம் வரும் சுயேச்சைகள்
புதுச்சேரியில் பிரதான கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பல தொகுதிகளில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் சுயேச்சை வேட்பாளர்கள் சிலிண்டர், குக்கர், பலாப்பழம் போன்ற சின்னங்களை பெரும்பாலும் தேர்வு செய்துள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேசிய கட்சி, மாநில கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி, சுயேச்சைகள் என ஆல்பட்டிக் வரிசையில் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இது போன்ற நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை கொண்டு சேர்ப்பதில் வேட்பாளர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பலர் மரத்தால் ஆன வாக்குப்பதிவு இயந்திர மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

இதில் தங்கள் சின்னம், வரிசை எண் ஆகிவற்றை குறிப்பிட்டு, இந்த வரிசை எண்ணில் சின்னம் இருக்கிறது என்பதை குறிப்பிட்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். சிலர் அசல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வருவது போல சவுண்ட், பச்சை நிற விளக்குகளையும் பொருத்தி மாதிரியை தயார் செய்துள்ளனர். தொகுதியில் வாக்கு சேகரிக்க செல்லும் போது, உங்களுக்குதான் ஓட்டு போடுவோம் எனக்கூறும் வாக்காளர்களிடம் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தை கொடுத்து வாக்களிக்குமாறு கூறுகின்றனர். வாக்குப்பதிவு தேதியான 9ம் தேதிக்கு முன்பே வாக்குப்பதிவை ஆரம்பித்து விட்டீர்களா? என நகைச்சுவையுடன் குறிப்பிட்டு வாக்கு செலுத்தினர். இதேபோன்று வாக்குப்பதிவு அன்றும் செலுத்துமாறு சுயேட்சைகள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

* வேட்புமனுவை நிராகரிக்கக்கூடும்: திரிணாமுல் வேட்பாளர்களுக்கு மம்தா எச்சரிக்கை
மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள், திரிணாமுல் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மம்தா கூறியதாவது: மேற்குவங்கத்தில் அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன. இது ஒரு புதிய நிர்வாக அமைப்பாக உள்ளது. தேர்தல் ஆணையத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு, உங்கள் வேட்புமனுக்களை நிராகரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும்போது, ​​உங்களுடன் வழக்கறிஞர்களையும் அழைத்துச் செல்லுங்கள். பொதுமக்கள் – குறிப்பாகப் பெண்கள், பாஜவிற்கு வாக்களிக்கக் கூடாது. அவர்கள் (பாஜவினர்) பெண்களுக்கு எதிரானவர்கள். அதனால்தான், தர்க்கரீதியான முரண்பாடுகள் இருப்பதாகக் காரணம் காட்டி, வாக்காளர் பட்டியலில் இருந்து பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

பீகார் தேர்தலுக்கு முன்பு, மக்களின் வங்கிக் கணக்குகளில் ரகசியமாகப் பணம் செலுத்தப்பட்டது. இங்கும், ஏழை மக்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களைக் பாஜவினர் கேட்பதாக நான் கேள்விப்படுகிறேன். அந்த விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்; அவ்வாறு செய்தால், உங்களிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். நான் இங்கு இருக்கும் வரை, டெல்லியில் இருப்பவர்களால் மேற்கு வங்கத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது. எனது அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, இதுவரை சுமார் 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமார் 18 லட்சம் பேரின் பெயர்கள் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வேண்டும். அதற்கான சட்டச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்காகவே தேர்தலில் பா.ஜவை வீழ்த்த வேண்டும்.

ஏனெனில் பல தொகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டுவிட்டன. தின்ஹாட்டாவில் சுமார் 30,000 பெயர்களும், எனது தொகுதியான பவானிபூரில் கிட்டத்தட்ட 40,000 பெயர்களும் நீக்கப்பட்டு விட்டன. ஆனால், இவை பாஜ தேர்தலில் வெற்றிபெற உதவாது. 294 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்கள் என்னை வேட்பாளராகக் கருத வேண்டும். மேற்குவங்கத்தில் ஊடுருவல் நடந்ததாக ஒன்றிய அரசு அடிக்கடி கூறிவருகிறது. அப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கான பொறுப்பு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே சாரும் . எங்காவது ஊடுருவல் நடந்திருந்தால், அவர்களே பொறுப்பு. இது குறித்து நான் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். தேர்தலுக்குப் பிறகு, உங்களுக்கு எரிவாயு கூட கிடைக்காமல் போகலாம், பாரம்பரிய அடுப்புகளில்தான் சமைக்க வேண்டியிருக்கும். திரிணாமுல் காங்கிரஸ் அரசு இலவச ரேஷன் வழங்குகிறது, ஆனால் பாஜவோ அதற்கான பெருமையை எடுத்துக்கொள்கிறது. அவர்களுக்கு (பாஜவுக்கு) வெட்கமே இல்லையா? இவ்வாறு ஆவேசமாக பேசினார்.

* அசாமை ஒரே குடும்பம் கொள்ளை அடிக்கிறது: பிரியங்கா ஆவேசம்
அசாம் மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்.9ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: அசாமில் ஒரே குடும்பம் எல்லாவற்றையும் கொள்ளையடித்து வருகிறது. அவர்கள் கொள்ளையடிக்காத நேரங்களில், சுரங்கங்கள், நிலங்கள் மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தும் பெரும் தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அசாமில் பாஜ லைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் பெரும் ஊழல் நடக்கிறது. சாரதா, ஸ்மார்ட் சிட்டி மற்றும் என்.சி. ஹில்ஸ் போன்ற ஊழல்கள் இதற்கு உதாரணம். தாங்கள் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை வழங்கியதாக பாஜ கூறுகிறது.

உண்மையில், இது ஒரு இரட்டை அடிமை அரசாங்கம். பிரதமர் மோடி அமெரிக்காவிடம் நாட்டை அடிமைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார், ஹிமந்தா பிஸ்வா சர்மா மோடியிடம் அடிமைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஹிமந்தாவின் பேரணிகளில் கலந்துகொள்ளுமாறு அசாம் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில் கலந்து கொள்ளாவிட்டால் பல்வேறு அரசுத் திட்டங்கள், குறிப்பாக முதன்மை வறுமை ஒழிப்புத் திட்டமான அருணோதய் ஆகியவற்றிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என அச்சுறுத்தப்படுகிறார்கள். எங்களின் போராட்டம் அந்த அச்சத்திற்கு எதிரானது, மேலும் அசாமின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதற்கானது. இந்த மண் உங்களுக்கு எல்லாவற்றையும் வழங்கியுள்ளது. ஆனாலும், மக்களிடம் எதுவுமே இல்லை. அசாமில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே செழித்து வளர்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Rahul ,Kerala ,Malayalam ,Parliament ,Rahul Gandhi ,Congress ,Pathanamthita ,Kottayam ,Mundinam Kozhikode ,Kannur ,
× RELATED துரைமுருகன், எடப்பாடி, செல்லூர் ராஜூ காரில் பறக்கும் படையினர் சோதனை