×

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அவிநாசி: அவிநாசி அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று விமர்சையாக நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்றதும், திருப்பூரின் ‘‘பண்ணாரி’’ எனப் போற்றப்படுவதுமான பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கடந்த மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கியது. மார்ச் 28ம் தேதி, அம்மனுக்கு மஞ்சள் நீர், பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது, மார்ச் 30ம் தேதி காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (செவ்வாய்) அதிகாலை 3 மணிக்கு, குண்டம் பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 40 நாட்கள் விரதம் இருந்து, துளசிமாலை கழுத்தில் அணிந்து, மஞ்சள் ஆடை அணிந்து, விரதமிருந்து, மாலையில் தீச்சட்டி (பூவோடு) ஏந்தி, பாத யாத்திரையாக பெருமாநல்லூருக்கு நடந்து வந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த 60 அடி குண்டத்தில் பக்தர்கள் இறங்கினர். இதில், முதலாவதாக அதிகாலை 4 மணிக்கு கோயில் தலைமை பூசாரிகள் குண்டம் இறங்கினர். இதையடுத்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனையும், கூட்டு வழிபாடும் நடந்தது. இன்று மாலை 3.30 மணிக்கு (தமிழக அரசு உத்தரவின்படி), திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடக்க உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழுத்தலைவர் மனோகரன் மற்றும் அறங்காவலர்கள் சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags : KALIAMMAN TEMPLE KUNDAM FESTIVAL ,PERUMANALLUR ,AVINASI ,Tiruppur district ,Kundam festival ,Perumanallur Santhukkalyamman Temple ,Pannari ,Tiruppur ,
× RELATED பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்