சென்னை: சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் 154 தேர்தல் பொறுப்பாளர்களை முதற்கட்டமாக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளை முறைப்படுத்துவதற்கு, கீழ்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் இன்பராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டலச் செயலாளர் வினோத்குமார், பொன்னேரி தனி தொகுதிக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன், திருத்தணி தொகுதிக்கு எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், திருவள்ளூர் தொகுதிக்கு மருத்துவ அணி செயலாளர், முன்னாள் எம்.பி. வேணுகோபால், மதுரவாயல் தொகுதிக்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம்,
மாதவரம் தொகுதிக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் தர்மேஷ்குமார், திருவொற்றியூருக்கு இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சுபா தேவராஜன், ஆர்.கே.நகர் தொகுதிக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நேதாஜி கணேசன், கொளத்தூர் தொகுதிக்கு வடசென்னை மாவட்ட செயலாளர், திருமங்கலம் கே.மோகன், வில்லிவாக்கம் தொகுதிக்கு எஸ்.டி.எஸ்.செல்வம், எழும்பூர் தனி தொகுதிக்கு அமைப்பு செயலாளர் வெங்கடேஷ் பாபு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று ராயபுரம் தொகுதிக்கு கோவை சத்யன், துறைமுகம் தொகுதிக்கு அறிவுடைநம்பி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு ராமசாமி, ஆயிரம் விளக்கு தொகுதிக்கு முகில், மூவேந்தன், விருகம்பாக்கம், தி.நகர் தொகுதிக்கு ஜெயவர்தன், வேளச்சேரி தொகுதிக்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சுனில், ஆலந்தூர் தொகுதிக்கு லியோ சுந்தர், ஜவஹர் அலி, ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதிக்கு மோகன், தாம்பரம் தொகுதிக்கு டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்எல்ஏ தன்சிங், செங்கல்பட்டு தொகுதிக்கு சீனிவாசன்,
கணிதா சம்பத், செய்யூர் தனி தொகுதிக்கு திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மதுராந்தகம் தனி தொகுதிக்கு வாலாஜாபாத் பா.கணேசன், அனந்தமங்கலம் சுப்பிரமணியன், காஞ்சிபுரம் தொகுதிக்கு மைதிலி திருநாவுக்கரசு, அரக்கோணம் தொகுதிக்கு சத்யா உள்பட தமிழகம் முழுவதும் 154 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும், உடனடியாக சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேரில் சென்று, தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களும், சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு வழங்கி வேட்பாளர்களின் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
