×

ஐபிஎல் 4வது போட்டியில் இன்று அஞ்சாத பஞ்சாப்; அசராத குஜராத்

முல்லன்பூர்: ஐபிஎல் தொடரின் 4வது டி20 போட்டி, முல்லன்பூரில் இன்று குஜராத் டைடன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது. முல்லன்பூரில் இன்று நடக்கும் 4வது டி20 போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த 2023ம் ஆண்டுக்கு பின், சுப்மன் கில்டை விட, ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரராக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி மட்டுமே உள்ளார். பேட்டிங்கில் தொடர்ந்து அதிரடி காட்டி வரும் கில்லின் ஸ்டிரைக் ரேட், 138 ஆக உள்ளது.

அவருடன், சாய் சுதர்சன் துவக்க வீரராக களமிறங்குவார். இந்த இணை, கடந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோராக 759 ரன்களை விளாசினர். இந்தாண்டும் இவர்களின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் மாற்று விக்கெட் கீப்பராக உள்ள குமார் குஷாக்ராவும் அதிரடி ஆட்டக்காரரே. மேலும், குஜராத் அணியில் ஜோஸ் பட்லர், அனுஜ் ராவத், டாம் பேன்டன், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர். பந்து வீச்சில், முகம்மது சிராஜ், காகிஸோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் கலக்க காத்திருக்கின்றனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர்களே அதிகம். அதன் துவக்க வீரர்களாக, பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா களமிறங்குவர். கடந்த சீசனில், இந்த இணை, 169 ஸ்டிரைக் ரேட்டுடன், 1024 ரன்களை குவித்து மிரட்டியது. மிடில் ஆர்டரில் நேஹல் வதேரா, ஷசாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்கே இடம்பெற்றுள்ளனர். பஞ்சாப் அணியில், ஜோஷ் இங்லீஸுக்கு மாற்றாக, ஆஸியின் அதிரடி வீரர் கூப்பர் கனோலி சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, பந்து வீச்சில், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், பென் துவார்சுயிஸ் உள்ளிட்டோர் வலு சேர்ப்பார்கள். போட்டி, இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நேருக்கு நேர்
* குஜராத், பஞ்சாப் அணிகள் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ளன.
* அவற்றில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளன.
* குஜராத் அணி, அதிகபட்சமாக 232 ரன்களை குவித்துள்ளது.
* பஞ்சாப், அதிகபட்சமாக 243 ரன்களை விளாசி உள்ளது.
* குஜராத்தின் குறைந்தபட்ச ஸ்கோர், 143.
* பஞ்சாபின் குறைந்த ஸ்கோர் 142.
* கடந்த 2025ல் நடந்த ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 11 ரன்னில் வெற்றி பெற்றது.

Tags : Punjab ,IPL ,Gujarat ,Mullanpur ,4th T20 match ,Gujarat Titans ,Punjab Kings ,4th T20 ,Shubman Gill ,Shreyas Iyer… ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்: சின்னர் சாம்பியன்; தொடர்ந்து 24 செட்களை வென்று சாதனை