×

மயாமி ஓபன் டென்னிஸ்: சின்னர் சாம்பியன்; தொடர்ந்து 24 செட்களை வென்று சாதனை

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர் அட்டகாச வெற்றியை பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் மயாமி நகரில் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர் (24), செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா (24) உடன் மோதினார்.

இப்போட்டியின் துவக்கம் முதல் சின்னர் அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டில் அவர் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த செட்டையும், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு 1000 புள்ளிகளும், ரூ.10.82 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. முன்னதாக, கடந்த மார்ச்சில் முடிந்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியிலும் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

தொடர்ச்சியாக, இண்டியன்வெல்ஸ், மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், ‘சன்ஷைன் டபுள்’ என்றழைக்கப்படும் சிறப்பு வெற்றிகளை அவர் பெற்றுள்ளார். இவ்வாறு, ஒரே ஆண்டில் அடுத்தடுத்து, இண்டியன்வெல்ஸ் மற்றும் மயாமி ஓபன் பட்டங்களை வென்ற 8வது வீரராக சின்னர் உருவெடுத்துள்ளார். மேலும், இண்டியன்வெல்ஸ், மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஒரு செட்டை கூட இழக்காமல் தொடர்ச்சியாக 24 செட்களை வென்று, சன்ஷைன் டபுள் சாதனை படைத்த முதல் வீரர் என்ற சாதனையை சின்னர் படைத்துள்ளார்.

Tags : Miami Open Tennis ,Cinner ,Miami ,Janik Cinner ,Miami Open Tennis Tournament ,Miami, USA… ,
× RELATED ஐபிஎல் 4வது போட்டியில் இன்று அஞ்சாத பஞ்சாப்; அசராத குஜராத்