நாமக்கல், மார்ச் 31: நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தெடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் செல்வமணி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கொல்லிமலை குண்டூர்நாட்டில் இருந்து சேந்தமங்கலம் வந்த அரசு பஸ்சில் சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த விவசாயி சின்னசாமி என்பவர் ரூ.1 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது வீடு கட்டுமான பணிக்கு செங்கல் வாங்க கொண்டு செல்வதாக கூறினார். ஆனால், அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சேந்தமங்கலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
அதே போல், கொண்டம்பட்டி பஸ்நிறுத்தம் மேடு பகுதியில், இந்த குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கார்த்திக் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.52 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது. அவர், கிரஷர் தொழில் செய்து வருவதாகவும், அங்குள்ள மோட்டார் பழுதானதால் பொருட்கள் வாங்க பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
