×

வீடுகளுக்கே போதைப்பொருளை சப்ளை செய்து பஞ்சாப் இளைஞர்கள் வாழ்வை சீரழித்த பாஜக, அகாலி தளம்: மாஜி முதல்வர் கெஜ்ரிவால் காட்டம்

 

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்தை அதிகரித்ததாக அகாலி தளம் மற்றும் பாஜக கூட்டணி மீது ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்குதலை தொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மோகாவில் கடந்த 14ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை ‘கெஜ்ரிவாலின் ஏடிஎம்’ என்று விமர்சித்ததோடு, போதைப்பொருளை தடுக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘அகாலி தளம் தலைமையிலான அரசில் ‘ஜூனியர் பார்ட்னராக’ இருந்த போது பஞ்சாப்பின் ஒவ்வொரு வீட்டிற்கும் போதைப்பொருளை சப்ளை செய்ததற்காக அமித் ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

அக்காலகட்டம் பஞ்சாப்பின் இருண்ட காலமாக இருந்தது. அரசியல் பாதுகாப்புடன் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயல்பட்டனர். இதனால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டது’ என்று தெரிவித்தார். குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் பிடிபட்ட போதைப்பொருள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், ‘போலீசார் வசம் இருந்த 2,300 கிலோ போதைப்பொருளை எலிகள் தின்றுவிட்டதாக குஜராத்தில் இருந்து வரும் செய்திகள் வேடிக்கையாக உள்ளன, உண்மையில் அவை திருடப்பட்டு விற்கப்பட்டுள்ளன’ என்று சாடினார். தற்போது பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான அரசு தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, ‘ஊழல் கறைபடிந்த தலைவர்களை’ சிறைக்கு அனுப்பி வருவதாக அவர் கூறினார். வரும் 2027ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு பஞ்சாப்பில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

Tags : BJP ,Akali Dal ,Punjab ,Former ,Chief Minister ,Kejriwal ,Chandigarh ,Aam Aadmi Party ,National Coordinator ,Arvind Kejriwal ,Moga, Punjab ,
× RELATED பாலக்காட்டில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்