×

கல்லாபுரம் பகுதியில் காணப்படும் கிரந்த எழுத்துடன் கூடிய கல்வெட்டு

உடுமலை : திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைகளிடையே அமைந்திருக்கும் ஊர் கல்லாபுரம். இங்கு 5 ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் சான்றுகளாக பாறைகள், ஓவியங்கள் இருக்கின்றன. அதேபோல் சங்க இலக்கியப் பாடல்களிலும் கல்லாமலர் குறித்தும், அயிரை தெய்வத்தை வழிபட்டமைக்கான பதிற்றுப்பத்து பாடல்களும் சான்றாக உள்ளன. மூவாயிரம் ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட மனிதர்கள் வசித்தமைக்கான கற்திட்டைகளும் அமராவதி ஆற்றின் நதிக்கரையில் இருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக கி.பி. 8ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ம் நூற்றாண்டு வரை சேர சோழ, பாண்டியர் கால ஆட்சியில் இங்கு விக்கிரம சோழன், வீரராசேந்திரன் போன்ற சிற்றரசர்கள் ஆட்சி செய்தமைக்கான கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. தற்போது கல்லாபுரத்திற்கும், மணல்மேட்டிற்கும் இடையே உள்ள மண்டபத்துறை பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கல் தூண்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. இது கோயில் மண்டபத்திற்காகவோ அல்லது படித்துறை மண்டபத்திற்காகவோ அமைக்கப்பட்டிருக்கலாம்.

எட்டடி உயரமும், எண் கோண சதுர அளவில் ஒரே அமைப்பில் வெட்டப்பட்ட கல் தூண்களாக இருக்கின்றன. இந்தக் கல் தூணில் இரண்டு வரிகள் சிதிலமடைந்த கல்வெட்டு எழுத்துகள் உள்ளது. இதில் நிலத்தின் எல்லைகளை குறிக்கும் கல்வெட்டாகவும், கொடை அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளை குறிக்கப்பட்ட கல்வெட்டு எழுத்துகளாகவும், நிலத்தின் வடக்குப் பகுதி குறிக்கையில் அதன் தெற்கு எல்லையையும் குறிப்பிடுகிறது.

இந்த நான்கு எல்லைகளுக்குட்பட்ட நிலம் என்று கல்வெட்டு நீண்டு செல்லும் பகுதியாக இருக்கிறது. முழுமையான கல்வெட்டு கிடைக்கப்பெறவில்லை. இதில் வரும் ‘த்ர’ எழுத்து கிரந்த எழுத்து வடிவத்தை ஒத்திருப்பதாகத் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார். இதற்கு அருகில் அரை அடி ஆழமுள்ள பாறைக்குழிகளும் இருக்கின்றன. அமராவதி நதிக்கரையில் மனித சமூகம் வாழ்ந்தமைக்கான சான்றுகளாக இதனைக் கருத்தில் கொள்ளலாம்.

குமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் கல்லாபுரம் பகுதியில் நிலங்களை அளப்பதற்காகவே அளவுகோல் கண்டெடுக்கப்பட்டது. கடத்தூர் மருதீசர் கோயில் கல் தூண் ஒன்றை கல்லாபுரத்தில் சொக்கி என்பவர் செய்து கொடுத்தமைக்கான கல்வெட்டு உள்ளது.

இந்தப் பாறைக்குழிக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் இது குறித்து விசாரித்தபோது இந்த மரத்தின் கீழ் வழிபாடு இருந்ததாகவும், காலப்போக்கில் இந்தக் கல் தூண்கள் சிதிலமடைந்ததால் அந்த வழிபாடும் மறைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். கல்லாபுரம் பகுதியில் கொடைவள்ளல் குமணன் வரலாற்றுக்காக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி மற்றும் ஜெய்சிங், சிவகுமார், வீரய்யன் மற்றும் அருட்செல்வன் ஆகியோர் கள ஆய்வு செய்து வருகின்றனர்.

கிரந்த எழுத்து என்றால் என்ன?

கிரந்த எழுத்து என்பது தமிழில் இல்லாத சமஸ்கிருத (வடமொழி) ஒலிகளை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதுவதற்காக சுமார் 4ம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு எழுத்து முறை ஆகும். இவை பெரும்பாலும் பல்லவர் கால செப்புத்தகடுகள் மற்றும் கோயில் கல்வெட்டுகளில் சமஸ்கிருதச் சொற்களை பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டன.

Tags : Kallapuram ,Udumalai ,Taluga, Tiruppur district ,Matatukulam ,Society of Literature ,
× RELATED தூர் வாரப்பட்ட பாசன கால்வாய் சிமெண்ட் தளமாக புனரமைப்பு