×

தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம்: டெல்லி மேலிடத்திற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் எச்சரிக்கை

திருப்பூர்: தமிழக பாஜகவில் நிலவி வந்த கோஷ்டி பூசல் தற்போது பகிரங்கமாக வெடிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள், கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைமைக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் போர் கொடி தூக்கியுள்ளனர். சமூக வலைதளப்பக்கங்களில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனை நேரடியாகச் சாடும் அண்ணாமலை ஆதரவாளர்கள், களப்பணியே செய்யாதவர்களுக்குத் தங்கத் தட்டில் வைத்துப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் அடையாளம் இல்லாமல் இருந்த கட்சியை வளர்த்த அண்ணாமலைக்குத் துரோகம் இழைக்கப்படுவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவியோ அல்லது வரும் தேர்தலில் அவர் விரும்பிய தொகுதியோ வழங்காமல் இழுத்தடிப்பது, அவரைத் திட்டமிட்டு அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் சதி என்று கொதித்துப்போய் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். கட்சிக்குள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கும்பல் அண்ணாமலையின் வளர்ச்சியைப் பிடிக்காமல் அவருக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும், அமித் ஷா மற்றும் மோடியின் செல்லப் பிள்ளையாகச் சித்தரிக்கப்படும் எல்.முருகன் போன்றவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

தேவையில்லாத கூட்டணியை முறித்துக் கொண்டு அண்ணாமலை வெளியே வர வேண்டும் என்ற முழக்கம் சமூக வலைதளம் முழுவதும் பரவி வருகிறது. அண்ணாமலையை எதிர்ப்பதன் மூலம் தமிழக பாஜக தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதாகவும், அண்ணாமலை என்ற ஒற்றை மனிதரைச் சிதைக்க நினைத்தால் வரும் தேர்தலில் பாஜக ஒரு இடத்தைக் கூடப் பிடிக்க முடியாது என்றும், பாஜகவிற்கு சாதகமான தொகுதிகளை கூட கேட்டுப்பெறதா உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு அரசியல் சாணக்கியரா? என கேள்வி எழுப்பி தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை வம்பிக்கிழுத்து பதிவிடும் அவர்களின் பதிவுகள் சமூக வலைதளப் பக்கங்களில் அனல் பறக்கின்றன.

இந்தா பிடி சாபம்
‘‘எங்க தலைவரு…தான் சட்டமன்ற தேர்தலில் எல்லோருக்கும் ‘சீட்’ கொடுக்கவேண்டிய இடத்தில் இருந்தாரு… ஆனா, இப்போ, அவரே ஒரு ‘சீட்’…க்காக போராடுறாரே…? இப்படி தவிக்க விட்டுட்டீங்களேன்னு சமூக வலைதளத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் சாபம் விடுகிறார்கள்.

Tags : Khoshdi ,Tamil Nadu ,Annamalai ,Delhi ,Tiruppur ,Khoshti Bhusal ,
× RELATED சமாதானம் பேசினாரு… வேட்பாளரா ஆனாரு…