×

திருவள்ளூர் மாவட்டத்த்ில் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை இணைக்காததை கண்கடித்து சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

பூந்தமல்லி, மார்ச் 29: கடந்த 30 ஆண்டுகளாக போராடியும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் 2 கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்காததை கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்கபோவதாக கூறி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஊராட்சியில், செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

1997ம் ஆண்டு ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்ட போது செம்பரம்பாக்கம் ஊராட்சி பூந்தமல்லி தாலுகாவிற்கும், அதே ஊராட்சிக்குட்பட்ட பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராமங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கும் மாற்றப்பட்டன. ஒரே ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள் இரண்டு மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்ததால் தேர்தல் நேரங்களில் ஓட்டு போடுவது, கல்வித் துறை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, போலீஸ் நிலையம், சுகாதாரம், ஊராட்சி நிர்வாகம் ஆகிய அனைத்தும் பூந்தமல்லி தாலுகா நிர்வாகத்தில் இருந்து வந்தது. ஆனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்று, நிலம் சம்பந்தப்பட்ட பட்டா, பத்திரப்பதிவு ஆகியவற்றிற்கு பெரும்புதூர் தாலுகாவிற்கு சென்று வந்தனர்.

இந்த ஊராட்சி இரண்டு மாவட்ட எல்லையில் இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை, திருவள்ளூர் மாவட்டத்துடன் முழுமையாக இணைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளாக போராடி வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2017ம் ஆண்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழஞ்சூர் வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணை முடிவில் இரண்டு கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என 2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகாவுடன் முழுமையாக இணைத்து 2022ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து சேவைகளும் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகாவிற்க்கு மாற்றப்பட்டது. ஆனால் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்கள் பூந்தமல்லி வருவாய்த் துறை பதிவேட்டில் இல்லை.

இந்த இரண்டு கிராமமும் இதற்கு முன்பு தவறுதலாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்குட்பட்ட மேவளூர்குப்பம் கிராமம் என்று தற்போதும் உள்ளது. மேலும் பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலக எல்லையில் இருந்த பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்கள், கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலக எல்லையில் மாற்றப்பட்டுள்ளது. பழஞ்சூரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள பூந்தமல்லி சார்பாதிவளார் அலுவலகத்திற்கு மக்கள் சென்ற நிலையில் தற்போது 20 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்தை பழையபடி பூந்தமல்லிக்கு மாற்ற வேண்டும்.

எனவே பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாதவை கண்டித்து பழஞ்சூர் பாப்பான்சத்திரம் கிராம மக்கள் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 200க்கும் மேற்பட்டோர் கையில் கருப்புக்கொடி ஏந்தி பழஞ்சூர் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊர்வலமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன், உதவி அலுவலர் உதயம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags : Tiruvallur district ,Palanjur ,Pappanchathiram ,Poonamalli ,Tiruvallur ,
× RELATED பூந்தமல்லி அருகே வானகரத்தில் உரிய ஆவணம் இல்லாத ரூ.5 கோடி பறிமுதல்