×

தாமரைப்பாக்கம் அருகே ஆபத்தை உணராமல் பைக் வீலிங் செய்யும் இளைஞர்கள்

ஊத்துக்கோட்டை, மார்ச் 28: தாமரைப்பாக்கம் அருகே, வெளிவட்ட சாலையில் ஆபத்தான வகையில் பைக் வீலிங் செய்யும் இளைஞர்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி வருகிறது.எனவே, போலீசார் பைக் வீலிங் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை அடுத்த, எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை சென்னை வெளிவட்ட சாலை ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் 132.87 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிங்கபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவாயல், காட்டுப்பள்ளி வழியாக எண்ணூர் துறைமுகம் வரை இந்த பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த சாலையின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரை பகுதியில் உள்ள சாலையில் இளைஞர்கள் சிலர் சமூக வளைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில் சாகசங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இது தங்களின் உயிரை மட்டுமல்லாது, பொது மக்களின் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்குகிறது என்பதை உணராத இளைஞர்கள் வீலிங் செய்து வருகின்றனர். இதனால், அவ்வழியாக ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சென்னை வெளிவட்ட சாலையில் ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தான முறையில் வீலிங் செய்யும் இளைஞர்களை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற ரீல்ஸ் மோகத்தால் பலர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அசம்பாவிதம் தொடராமல் இருக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Tags : Thamaraipakkam ,Uthukottai ,
× RELATED மகாவீர் ஜெயந்தி தினத்தில் இறைச்சி கடைகளை மூட வேண்டும்