×

நாஞ்சிக்கோட்டை பகுதியில் இயற்கை உரத்துக்காக வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட வாத்துகள்

*விவசாயிகள் ஆர்வம்

தஞ்சாவூர் : நாஞ்சிக்கோட்டை பகுதியில் இயற்கை உரத்துக்காக வயல்களில் வாத்துக்கள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் குறுவை, சம்பா, தாளடி என மூன்றுபோகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கோடை நெல் சாகுபடியும் நடைபெறுகிறது.

காவிரி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. இதை தொடர்ந்து கோடை சாகுபடிக்காக விவசாயிகள் நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

இதற்காக வயல்களில் ஆட்டு கிடை அமைத்தும், வயல்களை வாத்துகளை மேயச்சலுக்கு விட்டும் அதன் கழிவுகள் மூலம் இயற்கை உரங்களை பெறுகின்றனர். தற்போது நாஞ்சிக்கோட்டை பகுதியில் இயற்கை உரத்திற்காக வயல்களில் வாத்துகளை மேய்ச்சலுக்கு விட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வாத்துகளின் கழிவுகள் இயற்கை உரமாக பயன்படுகிறது. பயிர்களை தாக்கும் பூச்சிகளை வாத்துகள் அழிக்கின்றன.

இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் செலவும் குறைகிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வாத்துகள் 5 மாதங்களில் வளர்ந்து விற்பனைக்கு தயாராகின்றன. ஒரு வாத்தின் விலை ரூ.300 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகின்றன. கோழி வளர்ப்பை விட வாத்துகள் வளர்ப்பு பொருளாதார முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாக விளங்கி வருகிறது என்று வாத்துக்கள் வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

Tags : Nanjikottai ,Thanjavur ,Cauvery Delta ,Nagapattinam ,Thiruvarur ,Mayiladuthurai ,Samba ,Thaladi ,
× RELATED திமுக கூட்டணியில் போட்டியிடும்...