×

மழையின்றி வறட்சி ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிவால் விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையின் நீர்மட்டம் மழையின்றி வறட்சியால் மிகவும் சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு பரம்பிக்குளத்தில் தண்ணீர் திறக்கும் போது கான்டூர் கால்வாய் வழியாகவும் மழை இருக்கும்போது சின்னாறு, நவமலை, கவியருவி ஆகியவற்றில் இருந்தும் தண்ணீர் வரத்து இருக்கும்.

இந்த அணையிலிருந்து ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதுபோல் கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏழேகால் டிஎம்சி தண்ணீர், அவ்வப்போது திறக்கப்படுகிறது.

இதில், கடந்த ஆண்டில் ஜூன் துவக்கம் முதல் சில மாதமாக தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையின்போது, ஆழியார் அணையின் நீர்மட்டம் விரைந்து முழு அடியான 120 அடியையும் எட்டியது. மேலும், அதே ஆண்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் அவ்வப்போது பெய்த வடகிழக்கு பருவமழையினால், அணையின் நீர்மட்டம் பல மாதங்களாக சுமார் 1150 அடிக்கு மேல் இருந்துள்ளது.

அதன்பின் இந்த ஆண்டு துவக்கம் வரையிலும் 110 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. அதன்பின் மழையில்லாமல் வெயிலின் தாக்கம் மெல்லமெல்ல அதிகரிக்க துவங்கி அணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வறட்சியானது. இதனால், அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளது. ஆழியார் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவால் அணையின் பெரும்பாலான பகுதி பாறைகள் மற்றும் மணல் மேடான இடமாக தெரிகிறது. மேலும், ஆங்காங்கே சேறும் சகதியுமாகவும் சமபாதையாகவும் காணப்படுகிறது.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியார் அணை வறண்டது போல், இப்போது மீண்டும் அணைப்பகுதி வறண்டு வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இச்சூல்நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் நாட்களில் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலம் உண்டாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Aliyar dam ,Pollachi ,Parambikulam ,Coimbatore district ,
× RELATED நாஞ்சிக்கோட்டை பகுதியில் இயற்கை...