×

ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னை: ஏழ்மையை பயன்படுத்தி பணம் உதவி செய்து கடந்த 3 ஆண்டுகளாக இன்ஜினியரிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாவுவை தனிப்படை போலீசார் நெல்லையில் கைது ெசய்தனர். சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். அண்ணாபல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி 4ம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறேன்.

எனது ஏழ்மையை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் இன்டர்ஸ்டியல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஞானவேல்பாபு என்பவர் அடிக்கடி பணம் உதவி செய்து வந்தார். அதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வருகிறார். நேரில் பார்க்கும் போது, தவறான நோக்கத்தில் தன் மீது கைவைத்து பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். இதுபோல் கடந்த 3 ஆண்டுகளாக பேராசிரியர் ஞானவேல் பாபு தன்னை தொடர்ந்து பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். என்னை போல் விடுதியில் தங்கி படிக்கும் பல மாணவிகளுக்கும் அவர் பணம் உதவி வழங்கி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா தலைமையில் உடனே குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் வனிதா தலைமையிலான குழுவினர் மாணவி அளித்த புகாரின் மீது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் தொந்தரவு செய்து என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பேராசிரியர் ஞானவேல் பாபு மீது மாணவி அண்ணாபல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர் ஞானவேல் பாபு, புகார் அளித்த மாணவிக்கு அடிக்கடி போன் செய்து மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி தனது பாதுகாப்புக்காக வேறு வழியின்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது புகார் அளித்தது தெரியவந்தது.

அதேநேரம் போலீசார் அவரை தொடர்பு கொண்ட போது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று அச்சத்தில் அவர், இரவோடு இரவாக தலைமறைவானது தெரியவந்தது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் பேராசிரியர் இருக்கும் இருப்பிடத்தை தனிப்படையினர் ஆய்வு செய்த போது, அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் நெல்லை போலீசார் உதவியுடன் நேற்று பேராசிரியர் ஞானவேல் பாபுவை கைது செய்தனர். அவரை சென்னைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர்.

அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு தான், புகார் அளித்த மாணவி போல் வேறு மாணவிகளுக்கு உதவி செய்வது போல் பாலியல் தொந்தரவு செய்தாரா என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் புகார் அளித்த மாணவி, தனது புகார் மனுவில் தன்னை போல் பல மாணவிகள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பேராசிரியர் ஞானவேல் பாபு அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விடுதியில் தங்கி படிக்கும் ஏழ்மையான மாணவிகளை குறிவைத்து தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பேராசிரியர் ஞானவேல் பாபு உடன் வேறு யாரேனும் பேராசிரியர்கள் உள்ளனர்களா என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Anna University ,Gnanavel Babu ,Nellai ,Chennai ,Special Police ,Chennai… ,
× RELATED தெலங்கானாவில் பயங்கரம் காதலுக்கு...