×

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தஞ்சை வாலிபர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தஞ்சை மாவட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில மணி நேரங்களில், வெடித்து சிதறும், என்று சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்து, சென்னை விமான நிலைய போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு, அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாயகள் உதவியுடன், சென்னை விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது. எனவே இது சென்னை விமான நிலையத்திற்கு வரும், வழக்கமான புரளி என்று தெரிந்தது. இதுகுறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் இருந்து, வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலைய தனிப்படை போலீசார், தஞ்சை மாவட்டத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கே தொடர் விசாரணை நடத்தி, திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த நாசர் அகமது(35) என்பவரை கைது செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, நாசர் அகமது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் போலீசாரிடம் பேசினார். ஆனாலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதோடு, உண்மையில் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது நடிக்கிறாரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chennai ,Tanji district ,Chennai airport ,Chennai International Airport ,Chennai Municipal Corporation ,
× RELATED அரசு ஒதுக்கீட்டில் கடை, ஓட்டுநர் பணி...