×

பொதுப்பணித்துறை அதிகாரி உட்பட 3 பேரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் குணசேகரன் (54). சேப்பாக்கம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சீனியர் டிராஃப்டிங் ஆபீசராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2 தினங்கனுக்கு முன்பு இரவு குரோம்பேட்டையில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மின்சார ரயில் மூலம் பூங்காநகர் வந்துள்ளார்.

பின்னர், சேப்பாக்கம் செல்வதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் குணசேகரனிடம் ஆயிரம் ரூபாய் தரும்படி கேட்டுள்ளனர். தர மறுக்கவே கத்தியால் அவரது தலையில் வெட்டியுள்ளனர். அவரது சட்டை பையில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, ஆசாமிகளை கீழே தள்ளிவிட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் ஓடி, சிகிச்சைக்காக சேர்ந்தார். இதேபோல் சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வரும் பீகாரை சேர்ந்த முகமது சந்த் (25) என்பவரிடம், மர்மநபர்கள் 2 பேர் கஞ்சா கேட்டுள்ளனர். இல்லை என கூறியதால், அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.

இந்த இரு சம்பவம் குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வந்தனர். கல்பாக்கத்தை சேர்ந்த சாகர் (25) என்பவர், சவுகார்பேட்டையில் காவலாளியாக பணியாற்றும் தனது உறவினரை பார்க்க சென்ட்ரல் வந்துள்ளார். நேற்றிரவு 11.45 மணி அளவில் வால்டாக்ஸ் சாலை மதுபான கடை அருகே நின்றபோது, அங்கு வந்த ஆசாமிகள் 2 பேர், திடீரென சாகரின் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு அவரது செல்போன், 5000 ரூபாயை பறித்துகொண்டு தப்பினார். புகாரின்பேரில் யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த குரு பிரசாத் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை பூக்கடை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், பொதுப்பணித்துறை அதிகாரியை வெட்டியது உள்ளிட்ட 3 சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட குரு பிரசாத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

Tags : Dandaiyarpettai ,Gunasekaran ,Tiruvannamalai District Arani ,Sepakkam ,Public Works Guest House ,Works Office ,Krompet ,
× RELATED விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தஞ்சை வாலிபர் கைது