×

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் அனுமதி பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் கருணைக்கொலை: ஸ்பெயினில் நடந்த சோகம்

 

பார்சிலோனா: ஸ்பெயினில் பாலியல் பலாத்கார கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த நோயேலியா காஸ்டிலோ ராமோஸ் (25) என்ற இளம்பெண், கும்பல் ஒன்றால் மிகக்கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனமுடைந்த அவர், ஐந்தாவது மாடி ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் உயிர் பிழைத்த போதிலும், அவரது முதுகுத்தண்டின் எல்3 பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கால்கள் செயலிழந்து நிரந்தரமாக மாற்றுத்திறனாளியானார். அத்துடன் ஆறாத நரம்பியல் வலி மற்றும் கடுமையான உடல் உபாதைகளால் அவர் பாதிக்கப்பட்டார். தன்னுடைய தீராத உடல் மற்றும் மன வலியில் இருந்து விடுபட, தன்னை கருணைக்கொலை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கண்ணியமான முறையில் உயிரிழக்க அனுமதி கோரி நோயேலியா விண்ணப்பித்தார்.

சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் காட்டலான் மருத்துவ ஆணையம் அவரது நிலையை கருத்தில் கொண்டு ஒருமனதாக அனுமதி வழங்கியது. இருப்பினும், அவரது தந்தை ஜெரோனிமோ காஸ்டிலோ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகளின் மனநல பாதிப்பை சுட்டிக்காட்டி, இந்த முடிவை அவர் சுயமாக எடுக்கவில்லை எனக்கூறி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். இந்த சட்டப்போராட்டம் ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றம் வரை சென்றது.

இறுதியாக, கடந்த 10ம் தேதி ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் தடையை நீக்கியது. இதனைத் தொடர்ந்து, நேற்று மருத்துவ நடைமுறைகளின்படி அவருக்கு கருணைக்கொலை செய்யப்பட்டது. பராமரிப்பு மையத்தில் தனது அறையில் தனியாக இருக்க விரும்பிய நோயேலியா, தனது தாயின் உருவப்படத்தை வரைந்தது மற்றும் சிறுவயது நாய் குட்டியுடன் விளையாடியது உள்ளிட்ட மகிழ்ச்சியான நினைவுகள் கொண்ட நான்கு புகைப்படங்களை அருகில் வைத்துக்கொண்டு அமைதியான முறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டது ஸ்பெயினில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Spain ,Barcelona ,Noelia Castillo Ramos ,Barcelona, Spain ,
× RELATED அமெரிக்காவின் அடுத்தடுத்த ஏவுகணை...