டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதலை தற்போது தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒன்றிணைந்து இன்றுடன் 28வது நாளாக ஈரான் மீது ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
தாக்குதல் தொடங்கிய உடன் ஈரானின் உச்ச கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து, கடந்த 17ம் தேதி அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டார். இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் ஈரானின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. தற்போதுள்ள சூழலில், உயிரிழந்த அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்சக்கட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அவருடன் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ‘ஐஆர்ஜிசி’ எனப்படும் புரட்சிகர பாதுகாப்புப் படை கமாண்டர்கள் இணைந்து ராணுவ ரீதியிலான ஆட்சியை முன்னெடுத்து வருகின்றனர். இந்த புதிய தலைமை, அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு எதிராக இருந்த மத ரீதியிலான தடைகளைத் தகர்த்து, தற்காப்புக்காக அணு ஆயுதங்களை ஏந்தவும், சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகவும் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, அமெரிக்காவின் தரைவழி ஊடுருவலைத் தடுக்க ஈரான் தனது முழு பலத்தையும் திரட்டியுள்ளது. இதுதொடர்பாக ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்கப் படைகளின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவும், முடக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கவும் சுமார் 10 லட்சம் போர் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படையில் ஈரானின் வழக்கமான ராணுவம், புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய ‘பாசிஜ்’ துணை ராணுவப் படையினர் இணைந்துள்ளனர். இதுகுறித்து டெஹ்ரானில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்க வீரர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நரகத்தை உருவாக்க எங்கள் படைகள் தயாராக உள்ளன. எங்களது வான் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகள் மீது வாரக்கணக்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தப் போரை நிறுத்த 15 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால், கடந்த புதன்கிழமை அன்று
ஈரானின் புதிய தலைமை இந்தத் திட்டத்தை அதிரடியாக நிராகரித்தது. ‘அமெரிக்கா தனது படைகளை வளைகுடா பிராந்தியத்தில் இருந்து முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று ஈரான் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளது. இதனால் இப்பகுதியில் அமைதி திரும்புமா அல்லது போர் மேலும் தீவிரமடையுமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
* ஏப். 6ம் தேதி வரை காலஅவகாசம் நீடிப்பு
ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஈரானுக்கு 15 அம்சங்கள் கொண்ட புதிய அமைதித் திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, ஈரான் தனது அணுசக்தி மையங்களை நிரந்தரமாக மூட வேண்டும் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை நிபந்தனையின்றி உடனடியாக திறக்க வேண்டும் என்றும், ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற ஏப்ரல் 6ம் தேதி வரை டிரம்ப் கெடு விதித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க தரப்பில், ‘ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிட்டு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஏப்ரல் 6ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. தவறினால், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும். அதேசமயம், ஈரான் இதற்கு ஒத்துழைத்தால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலீடுகள் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த 15 அம்ச திட்டத்தை ‘ஒருதலைப்பட்சமானது’ என்று கூறி ஈரான் அரசு நிராகரித்துள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை மூட வேண்டும் என்றும் ஈரான் பதில் நிபந்தனை விதித்துள்ளது. தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஜெனரல் அசிம் முனிர் மற்றும் எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் இந்த பிரச்னையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஏப்ரல் 6ம் தேதி கெடு முடிவடைய இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இது அமைதி ஒப்பந்தத்தில் முடியுமா அல்லது தீவிரமான ராணுவ நடவடிக்கையாக மாறுமா என்பது உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
* அமெரிக்காவின் போர் வியூகம் தயார்
ஈரான் உடனான போர் இரண்டாம் மாதத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு ராணுவ ரீதியாக கடும் அழுத்தம் கொடுக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை அனுப்ப அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட 82வது ஏர்போர்ன் டிவிஷனின் 3,000 பாராசூட் வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் உள்ளனர்.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 50,000 அமெரிக்க வீரர்கள் உள்ள நிலையில், இவர்களையும் சேர்த்தால் படைபலம் மேலும் அதிகரிக்கும். ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கவும், ஈரானின் கார்க் தீவு போன்ற முக்கிய எண்ணெய் மையங்களைக் கைப்பற்றி சர்வதேச கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும் இந்த வீரர்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், ‘அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், நாட்டின் பாதுகாப்பு கருதி அனைத்து நீண்டகால திட்டங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 61 சதவீதம் பேர் இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
