×

தேசிய ஜனநாயக கூட்டணியில் மோதல் 6 முறை அதிமுக வென்ற ராமநாதபுரம் தொகுதியை பாஜவுக்கு ஒதுக்குவதா?: எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

 

ராமநாதபுரம்: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ராமநாதபுரம் தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் குப்புராமுவை விட 50,479 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனால், இந்த முறை அதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கப்படலாம் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் பாஜவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது அக்கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரே சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பாஜவினர் பதில் கருத்துகளை பதிவிட்டதால் கூட்டணி கட்சியினர் இடையிலான கருத்து மோதல் வெட்ட வெளிச்சமானது.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், `என்.டி.ஏ. கூட்டணி தலைமையின் கவனத்திற்கு… ராமநாதபுரம் தொகுதியை பாஜவுக்கு வழங்கியதை எடப்பாடி பழனிசாமி உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவண்: அதிமுக தங்கச்சிமடம் நகர் கழகம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணிக்குள் நிலவும் பூசலை வெட்ட வெளிச்சமாக்கும் இந்த போஸ்டரால் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தொகுதி அதிமுகவினர் சிலர் கூறுகையில், ‘ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அக்கட்சி வேட்பாளர் குப்புராமு படுதோல்வியை தழுவினார்.

ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதால் சென்ட்டிமென்ட் தொகுதி என கருதுகிறோம். எனவே, இந்த முறை அதிமுகவிற்கு தான் ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். ஆனால், உள்கட்சி கோஷ்டி பூசலை காரணம் காட்டி தொகுதியை பாஜவுக்கு தள்ளிவிட்டுவிட்டார். இதனால், மீண்டும் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Ramanathapuram ,National Democratic Alliance ,BJP ,Edapadi ,Tamil Nadu ,Deja Coalition ,Adimuka ,Bajaj ,Dimuka ,Khatarbatsha Muthuramalingam ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில்...