*மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்
கோபி : கோபி அருகே நண்பரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்தவர் மனசாட்சி உறுத்தியதால் கோபி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46). சமையல் தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 15.10.2023 அன்று கிருஷ்ணமூர்த்தியை இரண்டு பேர் சமையல் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அழைத்து சென்றனர்.
அதன் பிறகு கிருஷ்ணமூர்த்தி ஆண்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலின் கிளை வாய்க்கால் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யபட்டு கிடந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று கோபி சார்பு நீதிமன்றத்தில் சமையல் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ததாக கூறி கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்த முருகன் (எ) டவர் முருகன் (46), சரணடைந்தார்.
அதைத்தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த கவுந்தப்பாடி போலீசார் சரணடைந்த முருகனிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று முருகன், கோபி சரவணா தியேட்டர் வீதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் மது அருந்தி உள்ளனர்.
அப்போது, மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த முருகன், மறைத்து வைத்து இருந்த கத்தியால் கிருஷ்ணமூர்த்தியை குத்தி கொலை செய்து விட்டு இருவரும் தப்பி உள்ளனர்.
இந்நிலையில் நண்பரை கொலை செய்து விட்டதால் மூன்று ஆண்டுகளாக மனசாட்சி உறுத்தியதாகவும், குற்ற உணர்ச்சியை தாங்க முடியாத நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டதாக கூறி உள்ளார்.
அதைத்தொடர்ந்து முருகன் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள சரவணனை போலீசார் தேடி வருகின்றனர். நண்பரை கொலை செய்த வழக்கில் மனசாட்சி உறுத்தியதாக கூறி நீதிமன்றத்தில் குற்றவாளி சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
