×

மூணாறு சாலையில் சின்னாறு அருகே வளைவில் சிக்கிய நீளமான சுற்றுலா பேருந்து

*போக்குவரத்து ஸ்தம்பிப்பு

உடுமலை : உடுமலை மூணாறு சாலையில் சின்னாறு அருகே வளைவில் நீளமான சுற்றுலா பேருந்து சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் வழித்தடத்தில் தினசரி ஏராளமான பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

தமிழக பகுதியில் ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து சின்னாறு செக்போஸ்ட் வரை இருபுறமும் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. மூணாறு மட்டுமின்றி வழியில் உள்ள மறையூர், காந்தலூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர். மறையூர் பகுதி வியாபாரிகள் பொருட்கள் வாங்குவதற்காக உடுமலை நகருக்குதான் வருகின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் அதிகளவில் ஜீப்புகளும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று காலை கேரளாவில் இருந்து 2 சுற்றுலா பேருந்துகள் உடுமலை நோக்கி வந்தன. சின்னாறு செக்போஸ்ட்டுக்கு முன்பாக 3 கிமீ தூரத்தில் ‘எஸ் பெண்டு’ என்ற இடத்தில் வந்தபோது, முன்னால் சென்ற சுற்றுலா பேருந்து வளைவில் சிக்கிக்கொண்டது.

நீளமான பேருந்து என்பதால், அதன் பின்பகுதி வளைவில் திரும்ப முடியாமல் சாலையில் தட்டியது. ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பேருந்தை இயக்க முடியவில்லை. இதனால் வளைவிலேயே பேருந்து நின்றது.

இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த மறையூர் போலீசார் வந்த விசாரணை மேற்கொண்டனர். ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பேருந்தை தூக்கிவைத்து, நகர்த்தப்பட்டது. அதன்பிறகே பேருந்து செல்ல முடிந்தது.

வளைவில் பேருந்து சிக்கியதால், காலை 8.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை 4 மணி நேரம் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது.யானைகள் நடமாட்டமுள்ள அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றதால், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

Tags : Chinnaru ,Munnar road ,Udumalai ,Udumalai-Munnar road ,Munnar ,Kerala ,Tamil Nadu… ,
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்...