×

‘பெத்த அமவுண்ட் ஒண்ணு கை மாறி இருக்கு…’ நாமக்கல் வேட்பாளர் அறிவிப்பில் எடப்பாடியை மிரட்டிய தங்கமணி; மாற்றவில்லை என்றால் ராஜினாமா: ஒன்றிய செயலாளர்கள் கூட்டாக அறிவிப்பு

நாமக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக, வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் ஸ்ரீதேவி மோகன் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு, நாமக்கல் மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாமக்கல்- சேலம் ரோட்டில் உள்ள பாஸ்கரின் வீட்டில், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் கோபி, சேகர், ராஜா (எ) செல்வகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கட்சியின் வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் அதிமுகவினர் திரண்டனர்.

அவர்கள் மாவட்ட செயலாளர் தங்கமணிக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர் கோபி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி மோகன், கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலின் போது, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தார். எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணம் கொடுத்து உதவினார்.

அவரை தற்போது நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளனர். கடைசி நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மாவட்ட செயலாளர் தங்கமணி மிரட்டினார். பாஸ்கருக்கு நாமக்கல்லில் போட்டியிட சீட் கொடுத்தால், குமாரபாளையத்தில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகி விடுவதாக கூறினார். இதனால், பொதுச்செயலாளர் வேறு வழியின்றி, தங்கமணியின் பேச்சை கேட்டு ஸ்ரீதேவி மோகனுக்கு சீட் கொடுத்துள்ளார்.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர், தங்கமணிக்கு பெருந்தொகை கொடுத்ததாக கூறி வருகிறார்.

இப்படி பணம் வாங்கிக்கொண்டு சீட் கொடுத்தால், கட்சியில் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு எதிர்காலத்தில் எந்த மரியாதையும் இல்லாமல் போகும். எனவே, மாநகரில் உள்ள 39 வார்டு செயலாளர்களும், கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளனர். இந்த கடிதத்தை பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்க உள்ளோம். நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால், நாங்களும் எங்கள் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய கட்சியில் இருந்து நாங்கள் விலக மாட்டோம். பொறுப்புகளில் இருந்து மட்டும் விலகுவோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளருக்கு தேர்தலில் எந்த ஒத்துழைப்பும் கொடுக்க மாட்டோம். கட்சியின் உண்மையான விசுவாசிக்கு சீட் கொடுக்க வேண்டும். கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கமணி, கடந்த ஒரு ஆண்டில் நாமக்கல்லில் எந்த கூட்டமும் நடத்தவில்லை. தலைமை அறிவிக்கும் போராட்டங்களை வேறு ஊர்களில் நடத்தி வருகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Thangamani ,Edappadi ,Namakkal ,Sridevi Mohan ,AIADMK ,MLA ,Bhaskar ,
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்...