×

2 ஐபிஎல் டீம் சேல் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.15,300 கோடி பெங்களூரு அணி ரூ.16,706 கோடி

மும்பை: 19வது ஐபிஎல் சீசன் வரும் 28ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மைதானங்களில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நேற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.15,300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அணியை பொறுத்தளவில் மனோஜ் படாலே 65 சதவீத பங்குகளையும், ரெட் பேட் கேபிட்டல் 15 சதவீத பங்குகளையும், லச்லான் முர்டோக் 13 சதவீத பங்குகளையும் வைத்திருந்தனர். இந்த ஒட்டுமொத்த பங்குகளையும் முழுமையாக விற்க அனைவரும் ஒப்புதல் அளித்த நிலையில் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம்ஆர்வம் காட்டியது. ஆனால், அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி தனது குழுமத்தினருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கியுள்ளார்.

கல் சோமானி, கல்வித் தொழில்நுட்பம், தரவு தனியுரிமை, செயற்கை நுண்ணறிவு ஆளுகை மற்றும் விளையாட்டு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். கல் சோமானி, கடந்த 2021ம் ஆண்டிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலீடு செய்துள்ளார். தற்போது அணியின் முழுப்பங்குகளையும் கைப்பற்றியுள்ளார். இந்த விற்பனை ஒப்பந்தம் நடப்பு 2026 ஐபிஎல் சீசனுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அதன் உரிமையாளர்கள் தீவிரம் காட்டினர். இதன் எதிரொலியாக ஐபிஎல் வரலாற்றில் அதிக விலையாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.16,706 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த அணியை குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் ப்ளிட்ஸரின் போல்ட் வென்ச்சர்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு வாங்கியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய விற்பனையான இது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரூ.15,300 கோடி விற்பனைச் சாதனையை முறியடித்தது. புதிய நிர்வாகத்தின் கீழ், ஆர்யமான் விக்ரம் பிர்லா தலைவராகவும், சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்பார்கள். உரிமையாளர் குழுவில் போல்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டேவிட் ப்ளிட்ஸ் மற்றும் BXPE-ன் தலைமை நிர்வாக அதிகாரி விரால் படேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Tags : 2 ,IPL ,SALE ,RAJASTHAN ROYALS ,CRORE ,BANGALORE ,Mumbai ,19th IPL ,Chennai ,Kolkata ,Royal Challengers ,Bangalore, Rajasthan ,
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ் சபலென்கா,...