புதுடெல்லி: ஐபிஎல்லில் பின்பற்றப்படும் ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிக்கு எதிராக முன்னணி வீரர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது, டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேலும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2023ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, ஒரு அணி, போட்டியின் எந்தவொரு சமயத்திலும், ஏற்கனவே பட்டியலிட்டுள்ள 5 மாற்று வீரர்களில் ஒருவரை பயன்டுத்திக் கொள்ள முடியும். இந்த விதி, வரும் 2027 வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிராக, கடந்த 2024ல், ரோகித் சர்மா கருத்து தெரிவித்திருந்தார். கடந்தாண்டு, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும், இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்த மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், நேற்று இதுபற்றி கருத்து கூறுகையில், ‘இம்பேக்ட் பிளேயர் விதி எனக்கு பிடிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார். அதேசமயம், ‘தனிப்பட்ட முறையில் இந்த விதி எனக்கு பிடிக்காவிட்டாலும், விதிகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது’ என்றும் அவர் கூறினார்.
