×

மியாமி ஓபன் டென்னிஸ் சபலென்கா, ரைபாகினா காலிறுதிக்கு முன்னேற்றம்: சின்னர், ஸ்வெரேவ் 4வது சுற்றுக்கு தகுதி

ஃபுளோரிடா: மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று போட்டியில் சீனாவின் கின்வென் செங், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலி இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் 3வது நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபாகினா, ஆஸ்திரேலியாவின் தாலியா கிப்சனை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் உலகின் 5ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா, ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை எதிர் கொண்டார். இதில் பெகுலா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்று (25ம் தேதி) நடக்கும் காலிறுதி போட்டிகளில் கோகோ காஃப்-பெலின்டா பென்சிக், ரைபாகினா-ஜெசிகா பெகுலா, சபலென்கா-ஹெய்லி பேப்டிஸ்தேவ் மோதுகின்றனர். இதேபோல் நேற்று நடந்த ஆடவர் 3வது சுற்று போட்டியில் குரோஷியாவின் மேரின் சிலிக், தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெேரவ்வுடன் மோதினார். முதல் செட்டை ஸ்வெரேவ்வும், இரண்டாம் செட்டை சிலிக்கும் கைப்பற்ற 3வது செட் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.

இதில் ஸ்வெரேவ் ஆக்ரோஷமாக ஆடி 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.  மற்றொரு போட்டியில் உலகின் 2ம் நிலை வீரரான இத்தாலியின் ஜேனிக் சின்னர், பிரான்சின் கொரண்டின் மவுலட்வுடன் மோதினார். இப்போட்டியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்ற சின்னர், 4வது சுற்றுக்கு முன்னேறினார்.  இன்று நடக்கும் 4வது சுற்று போட்டியில் சின்னர், அலெக்ஸ் மைக்கெல்சனுடனும், ஸ்வெரேவ், குவெண்டின் ஹேலிசுடனும் மோதுகின்றனர்.

* பயிற்சியாளரை மாற்றும் இகா ஸ்வியாடெக்
உலகின் 3ம் நிலை டென்னிஸ் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஃபுளோடிடா மகாணத்தில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். 24வயதான இகா ஸ்வியாடெக் சமூக ஊடகத்தில் பகிர்ந்த செய்தியில், ‘‘மியாமி ஓபனில் தோல்வியடைந்த தருணத்தின் உணர்ச்சிப்பூர்வமான நிலையை அடைந்தேன். எனது பயிற்சியாளரிடம் பல முக்கியமான பாடங்களை கற்றுக்கொண்டேன். அது மிகவும் மனித இயல்பு என்று நான் நினைக்கிறேன்.

இருப்பினும், எனது பயிற்சியாளர் விம் ஃபிசெட்டுடன் பல மாதங்கள் இணைந்து பணியாற்றிய பிறகு, நான் ஒரு வேறுபட்ட பாதையை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளேன். பயிற்சியாளரை பிரிகிறேன்,’’ எனக்கூறியுள்ளார். டென்னிஸ் பயிற்சியில் மிகவும் மதிக்கப்படும் நபரான ஃபிசெட், இதற்கு முன்பு கிம் கிளைஸ்டர்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் நவோமி ஒசாகா உள்ளிட்ட பல கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களுடன் பணியாற்றியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘இகாவுடனான கூட்டணியில் பல சாதனைகளை செய்துள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். நாங்கள் இருவரும் மேலும் பலவற்றை விரும்பினோம், அதற்காக உழைத்தோம். ஆனால் முக்கியமான தருணங்களையும், பாடங்களையும் பகிர்ந்து கொண்டோம்,” என்றார். ஃபிசெட் பயிற்சியின் கீழ் இகா ஸ்வியாடெக் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Miami Open ,Sabalenka ,Raibagina ,Sinner ,Sverev ,Florida ,Florida, USA ,China ,Kinwen Cheng ,Belarus ,Arena Sabalenka ,
× RELATED ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.13,500...